கோயில்களில் விஐபி தரிசனம் படிப்படியாக ரத்து செய்யப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் இன்று (நவம்பர் 22) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “திருவண்ணாமலைக்கு இந்த ஆண்டு கிரிவலத்தை முன்னிட்டு 30 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்பதால் அதுகுறித்து ஆலோசிக்கப்பட்டது.
அறநிலையத்துறையில் ஆக்கிரமிப்பு நிலங்கள், வாடகை வசூல், நிலங்கள் மீட்பு ஆகியவை குறித்தும் விவாதிக்கப்பட்டது” என்றார்.
அப்போது விஐபி தரிசனம் குறித்துப் பேசிய அவர், “விஐபி தரிசனம் என்பது இந்த ஆட்சியால் ஏற்படுத்தப்பட்டது அல்ல. படிப்படியாக விஐபி தரிசனத்தைக் குறைக்கும் முயற்சியில் இந்து சமய அறநிலையத் துறை ஈடுபட்டுள்ளது.
நாமக்கல் ஆஞ்சனேயர் கோயிலில் 20 ரூபாய் தரிசன கட்டணம் இருந்தது. அதன்மூலம் ஆண்டுக்கு 40 லட்சம் ரூபாய் வருவாய் வந்தது. என்றாலும், இந்த நடைமுறை தேவையில்லை என்று முடிவெடுத்து, இந்த கட்டணமுறையை ரத்து செய்துவிட்டோம்.
இதுபோன்று எங்கெல்லாம் சாத்தியக்கூறுகள் உள்ளதோ அங்கெல்லாம் விஐபி தரிசனம் படிப்படியாக ரத்து செய்யப்படும்.
சமீபத்தில் நடைபெற்ற ஆடி கிருத்திகையின் போது திருத்தணி முருகன் கோயில் விழாவிலும் , திருச்செந்தூர் முருகன் கோயில் கந்த சஷ்டி கோயிலின் விழாவின் போதும் முழுமையாக விஐபி தரிசனத்தை முடக்கினோம்.
உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற நிலை மாற்றப்பட வேண்டும். அனைவரும் சமம் என்ற நிலை வரவேண்டும்” என்று கூறினார்.
பிரியா
ஷாரிக் வாட்ஸ் அப்பில் ஈஷா சிவன்: அதிர்ச்சித் தகவல்!
கேரள ஜோடியின் விநோத செயல்: பாராட்டிய இந்திய ராணுவம்!