சட்டப் போராட்டங்களுக்கு இடையே காத்திருக்கும் மாணவி உடல்: கள்ளக்குறிச்சியில் டென்ஷன்!

தமிழகம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள சக்தி பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் அவரது உடலை பெற்றுக் கொள்வதில் பெற்றோர்கள் தொடர்ந்து மறுத்து வருகிறார்கள்.

உயிரிழந்த மாணவியின் உடல் தங்கள் கவனத்துக்கு வராமலேயே கூறாய்வு செய்யப்பட்டதை எதிர்த்து மாணவியின் தந்தை ராமலிங்கம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. மறுகூறாய்வு செய்யவேண்டும் என்று கோரிக்கை வைத்தார் தந்தை. இதை ஏற்று மாணவியின் உடலை மறுகூறாய்வு செய்ய 3 பேர் கொண்ட மருத்துவக்குழுவினை நியமித்தது உயர் நீதிமன்றம். மேலும் தந்தை தரப்பில் மறுகூறாய்வின்போது வழக்கறிஞர் இருக்கலாம் என உத்தரவு பிறப்பித்தது. அதே வேளையில் தாங்கள் கூறும் மருத்துவர், குழுவில் இடம்பெற வேண்டும் என்ற பெற்றோரின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது.

இதனை தொடர்ந்து மாணவியின் உடல் மறுகூறாய்வு செய்யப்பட்டது. ஆனால் நீதிமன்ற உத்தரவுப்படி உடற்கூறாய்வின் போது தந்தையின் சார்பில் வழக்கறிஞர் அனுமதிக்கப்படவில்லை. இதனை ஏற்காத மாணவியின் பெற்றோர், உடலை வாங்க மறுத்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தனர். அதனை இன்று (ஜூலை 21 ) விசாரித்த நீதிமன்றம், வழக்கை திரும்ப பெற வேண்டும் என்று அறிவுறுத்தி தள்ளுபடி செய்தது. உயர் நீதிமன்றம் செல்லவும் அறிவுரை கூறியது.


இதனையடுத்து மாணவியின் உடலை அடக்கம் செய்ய வேப்பூர் பெரியநெசலூரில் ஏற்பாடுகள் அரசு சார்பில் செய்யப்பட்டு வந்தன. மேலும் அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்க அந்தப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டிருக்கிறார்கள்.


இதற்கிடையே மாணவியின் உடலை பெற்றுக்கொள்ள பெற்றோருக்கு உத்தரவிட வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் காவல்துறை சார்பில் இன்று ( ஜூலை 21 )வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், வழக்கில் மாணவி தரப்பு வழக்கறிஞர் ஆஜராக வேண்டும் என்று கூறி, விசாரணையை மதியம் 2.15 மணிக்கு ஒத்திவைத்தார்.

பிற்பகலுக்கு மேல் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், “நீதிமன்ற உத்தரவை மீறி மறு கூறாய்வு பரிசோதனையின்போது எங்கள் தரப்பு வழக்கறிஞர் இல்லாமலேயே நடத்திவிட்டனர்’ என மாணவியின் பெற்றோர் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. மேலும், ‘தேவைப்பட்டால் உயர்நீதிமன்றத்தை அணுகலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளதால், இவ்வழக்கை முடிக்கக்கூடாது’ என மாணவியின் பெற்றோர் தரப்பில் தொடர்ந்து வாதம் வைக்கப்பட்டது.
இதற்கு தமிழக அரசின் தரப்பில், “மாணவி மரண வழக்கில் அனைத்து நடைமுறைகளும் நீதிமன்ற உத்தரவுப்படிதான் நடைபெற்றது. ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் இருந்து மாணவியின் பெற்றோர் வழக்கை வாபஸ் பெற்றுவிட்டனர். மேலும் உச்சநீதிமன்றம் உத்திரவிட்டும் மாணவியின் பெற்றோர்கள் உடலை பெற்றுக்கொள்ளவில்லை” என வாதம் வைக்கப்பட்டது.


இவ்விரு வாதங்களையும் கேட்ட நீதிபதி சதீஷ்குமார், ”உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவை, நாளை (ஜூலை22 ) காலை 10.30 மணிக்கு இங்கு தாக்கல் செய்யுங்கள்” எனச் சொல்லி தமிழக அரசு தரப்புக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து உயிரிழந்த மாணவியின் உடல் இன்னும் அடக்கம் செய்யப்படாமல் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்னமும் வைக்கப்பட்டிருக்கிறது.

சட்டப் போராட்டங்களுக்கு இடையே பாதுகாக்கப்பட்டு வருகிறது மாணவியின் சடலம். இதனால் ஒவ்வொரு நிமிடமும் கள்ளக்குறிச்சியில் டென்ஷன் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.

கிறிஸ்டோபர் , மு.வா.ஜெகதீஸ் குமார்

+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
4

1 thought on “சட்டப் போராட்டங்களுக்கு இடையே காத்திருக்கும் மாணவி உடல்: கள்ளக்குறிச்சியில் டென்ஷன்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *