விநாயகர் சிலைகள் கடலில் நாளை (செப்டம்பர் 4) கரைக்கப்படவுள்ளதால் சென்னையில் போக்குவரத்து மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி பொது இடங்களில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகள் நாளை கடலில் கரைக்கப்பட உள்ளன. காசிமேடு, பட்டினப்பாக்கம், பாலவாக்கம், திருவொற்றியூர் பகுதிகளில் சிலைகளைக் கரைப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து சிலைகள் கடற்கரைக்குக் கொண்டு வந்து கரைக்கப்படும் என்பதால் போக்குவரத்து நெரிசல் என்று சென்னை காவல் துறை போக்குவரத்து மாற்றத்தை அறிவித்துள்ளது.
இதன்படி, நாளை பிற்பகல் 12 மணி முதல் இரவு 8 மணிவரை ஈவிஆர் சாலை, ஹாரிங்டன் சாலை, 100 அடி சாலை, ஆற்காடு சாலை, கோடம்பாக்கம் ரோடு, வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை,
நுங்கம்பாக்கம் ரோடு, நெல்சன் மாணிக்கம் சாலை, அண்ணா ரோட்டரி, கதீட்ரல் ரோடு, ஆர்.கே.சாலை, காமராஜர் சாலை, சாந்தோம் ஹைரோடு, டி.ஜி.எஸ்.தினகரன் சாலை, எண்ணூர் எக்ஸ்பிரஸ் ரோடு, திருவொற்றியூர் ரோடு,
எம்.எஸ் கோயில் ரோடு, பேசின் பாலம், வால்டாக்ஸ் ரோடு, பழைய ஜெயில் ரோடு, ராஜாஜி சாலை, முத்துசாமி பாலம், கொடி மரச்சாலை, காமராஜர் சாலை, வேளச்சேரி விஜயநகரம் சந்திப்பு, இசிஆர், ஓஎம்ஆர் எல்.பி. ரோடு,
தரமணி ரோடு, அண்ணா சாலை, பட் ரோடு, சர்தார் வல்லபாய் படேல் ரோடு ஆகிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
வாலாஜா சாலை, பாரதி சாலை, பெசன்ட் சாலை, டாக்டர்.ராதாகிருஷ்ணன் சாலை, கச்சேரி சாலை, தெற்கு கெனால் பேங்க் சாலை, வழியாக வரும் வாகனங்கள் காமராஜர் சாலை, சாந்தோம் நெடுஞ்சாலை நோக்கி செல்லாமல் மாற்றுப் பாதையில் செல்லலாம்.
அடையாற்றிலிருந்து பாரிமுனை செல்லும் வாகன ஓட்டிகள், ராமகிருஷ்ணா மட் ரோடு வழியாக மந்தைவெளி, லஸ் கார்னர், ராயப்பேட்டை நெடுஞ்சாலை ராயப்பேட்டை மணிக்கூண்டு, ஒய்ட்ஸ்ரோடு, ஸ்மித்ரோடு அண்ணாசாலை வழியாக பாரிமுனை சென்றடையலாம்.
மேலும், சிலை கரைப்பு நிகழ்ச்சிக்காக நகரத்தில் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
பொதுமக்களும் காவல் துறைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
மோனிஷா
விநாயகர் சிலை கரைப்பு விதிகள் இவைதான்!