விநாயகர் சிலை கரைப்பின் போது பிரச்சனைகளில் ஈடுபடுவோர் மற்றும் விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை, ஆவடி, தாம்பரம் என 3 காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட இடங்களில் மொத்தம் 2,254 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.
இந்த சிலைகள் அனைத்தும் நாளை (செப்டம்பர் 4) சென்னையில் உள்ள பாலவாக்கம், பட்டினப்பாக்கம், காசிமேடு, திருவொற்றியூர் கடற்கரை பகுதிகளில் கரைப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து, சிலை கரைப்பு ஊர்வலத்தில் எந்தவித அசாம்பவிதமும் ஏற்படாமல் இருப்பதற்காக 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.
இவர்களுடன் சேர்ந்து ஊர் காவல் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளதாகக் காவல் துறை தெரிவித்துள்ளது.
மேலும் சில எச்சரிக்கைகளையும் காவல் துறை அறிவித்துள்ளது.
அதன்படி,
மதவாத வெறுப்புகளைத் தூண்டும் வகையிலோ, பிற மதத்தினர் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையிலோ முழக்கமிடக் கூடாது.
சிலை கரைப்பு ஊர்வலத்தின் போது சாலைகளில் பட்டாசுகள் வெடிக்கக் கூடாது. காவல் துறை அனுமதி வழங்கிய பகுதிகளில் மட்டுமே சிலைகளை ஊர்வலமாகக் கொண்டு செல்ல வேண்டும்.
மேற்கண்ட கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறை அறிவித்துள்ளது.
மேலும், சிலை கரைப்பு பகுதிகளில் காவல் கட்டுப்பாட்டு மையங்கள் அமைத்து போலீசார் பைனாகுலர் மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
மோனிஷா