சென்னை: விநாயகர் சிலைகளை எந்தெந்த இடங்களில் கரைக்கலாம்?

Published On:

| By Monisha

Vinayagar idol immersion in chennai

தமிழகம் முழுவதும் வருகிற 18ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் சென்னையில் பல இடங்களில் வைக்கப்படும் விநாயகர் சிலைகளை எந்தெந்த இடங்களில் கரைக்கலாம் என்கிற விவரம் வெளியாகியுள்ளது.

சென்னை மாநகர் முழுவதும் சுமார் 2,000 இடங்களில் பெரிய அளவிலான விநாயகர் சிலைகளை வைப்பதற்கு போலீஸார் அனுமதி அளிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

இவை தவிர சிறிய சிலைகளையும் பொதுமக்கள் தங்களது பகுதி மற்றும் வீடுகளில் வைத்து வழிபடுவார்கள். இதுபோன்று சென்னையில் மட்டும் 50,000-க்கும் மேற்பட்ட சிலைகள் வழிபாட்டுக்காக வைக்கப்பட உள்ளன.

இந்த சிலைகளை நான்கு இடங்களில் கரைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வருகிற 18ஆம் தேதி பூஜைக்காக வைக்கப்படும் சிலைகளை இந்து அமைப்பினர் ஒரு வாரம் வைத்து பூஜை செய்வார்கள். பின்னர் அந்த சிலைகளை 24ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று ஊர்வலமாக கொண்டு சென்று கரைக்க உள்ளனர்.

இதற்காக சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், நீலாங்கரை பல்கலை நகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் பாப்புலர் எடை மேடை பின்புறம் ஆகிய நான்கு இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்ல 17 வழித்தடங்களை போலீஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

உதாரணத்துக்கு நுங்கம்பாக்கம், சிந்தாதிரிப்பேட்டை, எழும்பூர், புதுப்பேட்டை, பெரம்பூர், வியாசர்பாடி, ஆர்.கே.நகர், புளியந்தோப்பு,

பட்டாளம், சவுகார்பேட்டை, அயனாவரம் உள்ளிட்ட இடங்களில் வைக்கப்படும் சிலைகள் குறிப்பிட்ட வழித்தடங்கள் வழியாக பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரைக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று மற்ற பகுதிகளில் பூஜைக்காக வைக்கப்படும் சிலைகள் அந்தந்த பகுதிகளில் ஒதுக்கப்பட்டுள்ள வழித்தடங்கள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்படுகின்றன.

விநாயகர் சிலைகளை பூஜைக்காக வைப்பதற்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் அது தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது அந்தந்த பகுதிகளில் உள்ள இன்ஸ்பெக்டர்கள், உதவி கமிஷனர்கள், துணை கமிஷனர்கள் ஆகியோர் இந்து அமைப்பினருடன் ஆலோசனை நடத்தி வரும் நிலையில்,

அடுத்த வாரம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இறுதியாக ஆலோசனை கூட்டம் நடத்தப்பட உள்ளது.

இந்த கூட்டத்துக்குப் பிறகு விநாயகர் சதுர்த்தி தொடர்பாக பல்வேறு முக்கிய கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட உள்ளன. விநாயகர் சதுர்த்தியையொட்டி 20,000 போலீஸார் சென்னையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

ராஜ்

கிச்சன் கீர்த்தனா: முட்டைத் தொக்கு

வேலைவாய்ப்பு : எஸ்பிஐ வங்கியில் பணி!

டிஜிட்டல் திண்ணை: மோடி கோபம்… கணக்குத் தீர்க்கும் கவர்னர்? காத்திருக்கும் உதயநிதி

இந்தியனா? பாரதீயனா? கமல்-ஷங்கர் ஃபைட்: அப்டேட் குமாரு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel