விநாயகர் சதுர்த்தி பொது விடுமுறை தினத்தை செப்டம்பர் 17 ஆம் தேதியில் இருந்து 18 ஆம் தேதிக்கு மாற்றி தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் விநாயகர் சதுர்த்தியும் ஒன்று. ஆவணி மாதம் வரும் சதுர்த்தி தினத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும்.
வீடுதோறும் விநாயகர் சிலைக்கு சிறப்பு பூஜை செய்து பின்னர் அந்த சிலைகளை கடல், ஆறு, குளம் உள்ளிட்ட நீர் நிலைகளில் கரைப்பது தான் வழக்கம். இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி தினம் நெருங்கி வருவதால் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சிலை தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தமிழக அரசின் விடுமுறை தின குறிப்பில் செப்டம்பர் 17 ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்த விநாயகர் சதுர்த்தி பொது விடுமுறையை செப்டம்பர் 18 ஆம் தேதிக்கு மாற்றி தமிழக அரசு அறிவித்துள்ளது.
பொதுவாக அமாவாசையில் இருந்து 4வது நாள்தான் சதுர்த்தி திதி வரும். அதன் அடிப்படையில்தான் இந்த ஆண்டு ஆவணி மாத அமாவாசை செப்டம்பர் 14 ஆம் தேதி வருகிறது. இதிலிருந்து 4ஆம் நாளான செப்டம்பர் 18ஆம் தேதியே விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும்.
செப்டம்பர் 18ஆம் தேதி காலை 11.28 மணிக்கு சதுர்த்தி தொடங்கி அடுத்த நாள் 19ஆம் தேதி 11.44 மணிக்கு முடிவடைகிறது.
இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 18ம் தேதி கொண்டாடப்படும் என இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு, பல்வேறு கோயில்களின் தலைமை தெரிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு விநாயகர் சதுர்த்தி விடுமுறையை மாற்றியது தொடர்பாக அரசாணை ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளது.
மோனிஷா
ஒரே நாடு ஒரே தேர்தல்: குழு அமைத்தது மத்திய அரசு!
அனுமதியற்ற மனைப்பிரிவுகளுக்கு அங்கீகாரம் பெற அவகாசம் : முத்துசாமி புதிய அறிவிப்பு!