ஃபெஞ்சல் புயல் காரணமாக ஏற்பட்ட கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விழுப்புரம் மாவட்டத்தில் நிவாரண உதவிகள் தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகின்றன.
அங்கு வெள்ளம் வடிந்த நிலையில், நிவாரண உதவிகள் பெறுவதில் அங்குள்ள மக்களிடையே வடியாத சாதிய வன்மம் வெளிப்பட்டு வருவதை அங்குள்ள சில சம்பவங்கள் நமக்கு உணர்த்துகின்றன.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் நல்லூர் அருகில் ஆனத்தூர் கிராமத்தில் நேற்று (டிசம்பர் 6) வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5 கிலோ அரிசி பையும், மளிகை சாமான்களும் வழங்கப்பட்டது.
ஒரு கட்டத்தில் 5 கிலோ அரிசி பை மீதமிருக்க, மசாலா சாமான்கள் காலியானது.
இதனையடுத்து அரிசி பையை மட்டும் வழங்கிய வீஏஓ வெங்கடேசனிடம் ‘அதெப்படி எங்களுக்கு வெறும் அரிசியை பையை மட்டும் தருவீங்க? என்று கேட்டு அக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.
அதற்கு அவர், “கவர்மெண்ட் கொடுக்குறத தானே கொடுக்க முடியும்… நாங்க என்ன பண்ண முடியும்?” என்று கேள்வி எழுப்பினார்.
இதனால் ஆத்திரமடைந்த கண்ணன், ஆறுமுகம், தமிழ் மணி, சிரஞ்சீவி ஆகிய நான்கு பேரும் வீஏஓ வெங்கடேசனை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த அக்கிராமத்தை சுற்றியுள்ள மற்ற வீஏஓ அலுவலர்கள், தாக்குதலில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி பணி செய்ய மறுத்து ஸ்ட்ரைக்கில் ஈடுப்பட்டனர்.
நிவாரண உதவிகள் வழங்கும் பணிகள் நடந்து வரும் நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட நான்கு பேரில் ஒருவரான சிரஞ்சீவியை போலீசார் கைது செய்துள்ளனர்.
எனினும் தாக்குதலில் ஈடுபட்ட மற்ற மூவரையும் கைது செய்யக்கோரி வீஏஓ அலுவலர்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

சாதி பாத்து தான் டோக்கன் கொடுக்குறியா?
அதே நாளில் செஞ்சி அனந்தபுரம் அருகில் ஒட்டம்பட்டு அந்த கிராமத்தின் ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி, விஏஓ திருமலை இருவரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2000 டோக்கன் வழங்கி வந்தனர்.
அரசு வழிகாட்டுதலின்படி தாழ்வான இடத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு மட்டுமே அவர்கள் டோக்கன் வழங்கினர். மேடான பகுதியில் பாதிக்காமல் இருந்தவர்களுக்கு டோக்கன் வழங்கவில்லை.
இதுகுறித்து கேள்விப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் ரேவதியின் கணவரான திருநாவுக்கரசு, வீஏஓ திருமலையைப் பார்த்து ’சாதி பாத்து தான் டோக்கன் கொடுக்குறியா? என்று கூறி அவரை தாக்கியுள்ளார்.
இந்த தாக்குதலை கண்டித்து வீஏஓ சங்கம் சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
நிவாரணம் சரியாக கொடுக்காததாலும், வழங்கும் பொருள் தரக்குறைவாக இருப்பதாலும் விழுப்புரம் மாவட்டத்தில் ஆங்காங்கே போராட்டங்களும், சாதிய மோதல்களும் வெடித்துள்ளது.
வணங்காமுடி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
அரசியலில் பதில் சொல்லக்கூடிய அளவுக்கு விஜய் வளரவில்லை : ரகுபதி