கோவிலுக்குள் பட்டியலினத்தவர் நுழைய அனுமதி மறுத்த விவகாரம் தொடர்பாக கோட்டாட்சியர் இன்று (ஜூன் 9) விசாரணையை தொடங்கியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான திரௌபதி அம்மன் கோவில் உள்ளது.
எனினும் கோவிலுக்குள் சென்று வழிபட பட்டியலின மக்களுக்கு தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.
கடந்த ஏப்ரல் மாதம் 7 ஆம் தேதி தீமிதி திருவிழா நடைபெற்றது. அப்போது கோவிலுக்குள் செல்ல முயன்ற பட்டியலின இளைஞரை தடுத்து நிறுத்திய சிலர் அவரை தாக்கியுள்ளனர்.
இந்த தாக்குதலை அடுத்து இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவிலுக்குள் சென்று வழிபட தங்களுக்கு உரிமை உண்டு என பட்டியலின மக்கள் தொடர்ந்து போராடி வந்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக இரு தரப்பினர் உடன் விழுப்புரம் மாவட்ட கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் 6 முறை நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால், மாவட்ட ஆட்சியர் பழனி தலைமையில் 2 முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்த நிலையில் மேல்பாதி கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலுக்கு ஜூன் 7 ஆம் தேதி காலை 6.30 மணிக்கு கோட்டாட்சியர் சீல் வைத்தார்.
இதனால் இரு சமூகத்தினர் இடையே மோதல் ஏதும் ஏற்படாமல் இருப்பதை கண்காணிக்கவும் பாதுகாப்புப் பணிகளுக்காகவும் சுமார் 2,000-க்கும் அதிகமான போலீசார் மேல்பாதி கிராமத்தை சுற்றி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
முன்னதாக மாவட்ட ஆட்சியர் மற்றும் கோட்டாட்சியர் நடத்திய 8ஆம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்த நிலையில்,
வெள்ளிக்கிழமை (இன்று) ஆஜராக வேண்டும் என்று இரு சமூகத்தை சேர்ந்த 80 பேருக்கு கோட்டாட்சியர் சம்மன் அனுப்பினார்.
அதன்படி இன்று கோட்டாட்சியர் தலைமையில் நடைபெறும் விசாரணைக்கு பட்டியலின சமூகத்தை சேர்ந்த 24 பேர் உட்பட 62 பேர் ஆஜராகியுள்ளனர்.
விசாரணையின் போது இரு தரப்பினரும் எழுத்துப்பூர்வமாகப் பதிலளிக்க உள்ளனர்.
அதன் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்க உள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோனிஷா
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அறிவிப்பு!
முதல் திருமண நாள்: குழந்தைகளின் முகம் காட்டிய நயன்தாரா… உருகிய விக்னேஷ் சிவன்