வாரந்தோறும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் ஒளிபரப்பாகி வருகிறது சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் நிகழ்ச்சி .
மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த நிகழ்ச்சி திறமை வாய்ந்த இளம் பாடகர்களை தமிழகத்துக்கு அடையாளம் காட்டும் விதத்தில் அமைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பாக பாடுபவர்கள் சோசியல் மீடியாவிலும் வைரலாகி விடுவார்கள்.
இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றவர் தர்ஷினி. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அம்மனப்பாக்கம் இவருடைய சொந்த ஊர். 60 முதல் 70 குடும்பங்கள் வாழும் இந்த ஊருக்கு தர்ஷினி சரிகமப நிகழ்ச்சியில் மேடை ஏறும் வரை, பஸ் வசதி இல்லை.
இந்த நிலையில், சரிகமப நிகழ்ச்சியில் பங்கேற்ற தர்ஷினி, ‘பல வருடங்களாக எங்கள் ஊருக்கு பஸ் வசதி இல்லை. எங்கள் ஊரை சேர்ந்த குழந்தைகள் படிக்க செல்ல வேண்டும் என்றால் கூட தினமும் 5 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டும்’ என்று வேதனையுடன் கூறியிருந்தார்.
தொடர்ந்து ஜீ தமிழின் சரிகமப குழுவினர் தர்ஷினியின் ஊருக்கு பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் இதனால், அந்த ஊர் மக்களின் வாழ்வாதாரம் உயரும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்த தகவல் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரின் காதுக்கு சென்றது. உடனடியாக, அவர் அந்த கிராமத்துக்கு பஸ் வசதி ஏற்படுத்த உத்தரவிட்டார்.
அதுமட்டுமல்லாமல், இன்று (டிசம்பர் 5) அமைச்சர் சிவசங்கர் அந்த ஊருக்கு நேரடியாக சென்று தர்ஷினியின் கையாலேயே அம்மனப்பாக்கத்தில் இருந்து பேருந்து சேவையை கொடி அசைத்து தொடங்கி வைக்க செய்தார்.
தர்ஷினி வழியாகவும் ஜீ தமிழின் சரிகமப குழுவினர் தமிழக அரசுக்கு வைத்த கோரிக்கை மூலமாகவும் தங்களது நீண்ட நாள் கனவு நிறைவேறி இருப்பதாக அம்மனப்பாக்கம் கிராம மக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
-எம்.குமரேசன்
கல்யாணம் முடித்து குழந்தை பெற்ற பிறகு டாக்டர், எம்.டி பட்டம் பெற்ற சிவகார்த்திகேயனின் சகோதரி!