விளைநிலங்களை சேதப்படுத்தும் காட்டு விலங்குகளைத் தடுக்காத வனத்துறை அதிகாரிகளை, காட்டுப்பன்றிகள் வேட்டையாடப்படுகின்றன என்று கூறி வரவழைத்து, கிராம மக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த பூதிப்பட்டியில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதி மக்கள் விவசாயத்தை நம்பி உள்ளனர். வனப்பகுதியை சுற்றி உள்ள இந்தக் கிராமத்துக்கு அடிக்கடி காட்டு யானைகள் மற்றும் பன்றிகள் அங்கு பயிரிடப்பட்டுள்ள சாமை, கடலை, ராகி உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.
இதுகுறித்து வனத்துறையினரிடம் கிராம மக்கள் பலமுறை தெரிவித்தும் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதே நிலை தொடர்ந்து நீடித்ததால் நேற்று (செப்டம்பர் 20) வனத்துறையினருக்கு காட்டுப்பன்றிகள் வேட்டையாடப்படுகின்றன என்று அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தகவல் தெரிவித்தனர்.
உடனே பென்னாகரம் வனசரக அலுவலர் செந்தில்குமார் தலைமையிலான வனத்துறையினர் அங்கு சென்றனர். உடனே அப்பகுதி மக்கள் வனத்துறையினரை சுற்றி சிறை பிடித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது அவர்கள் வனத்துறை அதிகாரிகளிடம் “எங்களுடைய ஆடு, மாடு வனப் பகுதியில் மேய்ந்தால் அபராதம் வசூலித்து வழக்கு பதிவு செய்கின்றனர். ஆனால், கஷ்டப்பட்டு நாங்கள் வளர்த்து வரும் மானாவரி பயிர்களை இரவு நேரங்களில் காட்டு விலங்குகள் சேதப்படுத்தி வருகிறது.
இவ்வாறு சேதப்படுத்தும் பயிர்களுக்கு அரசு எவ்வித இழப்பீடும் வழங்குவதில்லை ஆனால் காட்டுப்பன்றி வேட்டை என கூறினால் உடனே வருகிறீர்கள்” என கூறிய விவசாயிகள், “எங்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற மாவட்ட நிர்வாகம் உடனடியாக விளை நிலங்களுக்கு புகும் காட்டு விலங்குகளை தடுத்து நிறுத்த வேண்டும். எங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராஜ்
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
கிச்சன் கீர்த்தனா: ராகி ஸ்வீட் சேமியா
டிஜிட்டல் திண்ணை: தகர்ந்த ஜாமீன் கனவு… தளர்ந்த செந்தில் பாலாஜி- ஸ்டாலினை சூழும் நெருக்கடி!