ஜெயலலிதாவை வெளிநாட்டு சிகிச்சைக்கு அழைத்துச் செல்லாமல் சசிகலாவும், அப்பல்லோ மருத்துவமனையும் செய்த சதிக்கு முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கருவியாக திகழ்ந்திருக்கிறார் என்று ஆறுமுகசாமி ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
அந்த அறிக்கைப்படி சசிகலா, அவரது உறவினரான மருத்துவர் சிவக்குமார், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோரை குற்றவாளிகளாகக் கருதி விசாரணை நடத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அதில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது பல குற்றச்சாட்டுகளை தெரிவித்திருக்கிறது ஆணையம்.
மருத்துவத்துறை பற்றி நன்கு அறிந்தும் ஜெயலலிதா சிகிச்சை பற்றிய பல கேள்விகளுக்கு விஜயபாஸ்கர் தெரியவில்லை, நினைவில்லை என்றே பதிலளித்ததாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவுக்கு இதயத்தில் ஏற்பட்ட துளை பற்றிக் கூட தெரியாது என்றும், முதல்வருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகளை அப்பல்லோ நிர்வாகம் மட்டும்தான் முடிவு செய்ததாகவும் விஜயபாஸ்கர் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
அதேபோன்று ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கவேண்டும் என்று பரிந்துரைத்தது கூட அவருக்கு தெரியவில்லை என்று பதிலளித்திருக்கிறார்.
சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தும், மறைந்த முதல்வரை சிகிச்சைக்காக வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்ல விஜயபாஸ்கர் எந்த முயற்சியும் எடுக்காதது வியப்பாக இருக்கிறது.

ஒரு தகுதிவாய்ந்த மருத்துவராக இருந்தாலும், நோயாளியின் மருத்துவ நிலை, மருத்துவ விதிமுறைகள், கருதப்பட்ட மற்றும் செய்யப்பட்ட நடைமுறைகளை புரிந்து கொள்வதில் திறமையானவராக இருந்தும்,
ஜெயலலிதாவின் உயிரை காப்பாற்றும் முயற்சியில் விஜயபாஸ்கர் அறிவையும், மனதையும் பயன்படுத்தவில்லை.
சிகிச்சை தொடர்பான பல கேள்விகளுக்கு நினைவில்லை, தெரியவில்லை என்று பதிலளித்த விஜயபாஸ்கர், அப்பல்லோ மருத்துவர்கள் சிறந்த சிகிச்சையை வழங்கினார்கள் என்று மட்டும் ஆணித்தரமாகக் கூறினார்.
உறவினர்களற்ற மறைந்த முதல்வரை வெளிநாட்டு சிகிச்சைக்கு அழைத்துச் செல்வதற்கான முயற்சிகளை முறியடித்து, அப்பல்லோ மருத்துவமனையிலேயே தங்க வைப்பதற்காக சசிகலா மற்றும் அப்பல்லோ மருத்துவர்கள் பயன்படுத்திய முக்கிய கருவியாகவே விஜயபாஸ்கர் திகழ்ந்திருக்கிறார் என்று ஆறுமுகசாமி ஆணையம் அதிரடியாக குற்றம் சாட்டியுள்ளது.
கலை.ரா
பெங்களூருவில் ஜெயலலிதாவுக்கு எதிராக சசிகலா குடும்பம் நடத்திய கூட்டம்!