தனது பிறந்தநாள் கொண்டாடங்களை தவிர்த்து கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்கள் குடும்பங்களுக்கு உதவுமாறு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று (ஜூன் 21) உத்தரவிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி 50க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்துக்கு அரசியல் கட்சியினர் அனைவரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் அரசுக்கு எதிராக கண்டன அறிக்கை வெளியிட்ட தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், நேற்று மாலையில் கள்ளக்குறிச்சியில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
இந்த நிலையில், நாளை அவரது 50வது பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில், கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுமாறு விஜய் தனது கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து, தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் புஸ்லி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது :
“தனது பிறந்த நாள் கொண்டாட்டங்களைத் தவிர்த்து, கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தவர்கள் மற்றும் சிகிச்சை பெறுவோரின் குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் நேரடியாகச் சென்று உடனே வழங்கிட அனைத்து தமிழக வெற்றிக் கழக மாவட்ட நிர்வாகிகளுக்கும் தளபதி விஜய் உத்தரவிட்டுள்ளார்.
எனவே தலைவரின் உத்தரவின்படி, கழக நிர்வாகிகள், கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவி மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட தேவையான உதவிகளை உடனடியாகச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” என விஜய் உத்தரவிட்டதாக பதிவிட்டுள்ளார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கள்ளக்குறிச்சி மரணம் : சட்டசபையில் கடும் அமளி… அதிமுக எம்.எல்.ஏ.க்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றம்!
சட்டென உச்சம் தொட்ட தங்கம் விலை : எவ்வளவு தெரியுமா?