சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் இளம்பெண் சத்யாவை ரயில் முன் தள்ளிவிட்டுக் கொன்ற சதீஷுக்கு விதிக்கப்பட வேண்டிய தண்டனை பற்றி நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.
சென்னை ஆலந்தூரைச் சேர்ந்த கல்லூரி மாணவி சத்யா ரயில் முன் தள்ளி கொலை செய்யப்பட்ட நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
காதலை ஏற்க மறுத்த அவருக்கு நடந்த இந்த கொடுமை பலரையும் கோபமடைய வைத்திருக்கிறது. ஆசை மகளின் இறப்பை ஏற்றுக் கொள்ள முடியாத தந்தை மாணிக்கமும் மதுவில் மயில் துத்தத்தை கலந்து குடித்து உயிரை மாய்த்துக் கொண்டார்.
தந்தை, மகளின் உடல்கள் ஒரே ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்டு அருகருகே வைக்கப்பட்டிருப்பதை பார்த்த உறவினர்கள் கதறியது கல் நெஞ்சையும் கரைப்பதாக இருந்தது.

உடல்நலம் குன்றியிருக்கும் சத்யாவின் தாய் ராமலட்சுமிக்கு ஆறுதல் சொல்ல சென்ற காவல் ஆணையர் சங்கர் ஜிவால் காலில் விழுந்து,
‘என் மகளை தந்துவிடுங்கள்’ என்று அவர் அழுதது நெஞ்சை உலுக்கியது. சதீஷுக்கு கடுமையான தண்டனை கொடுக்கவேண்டும் என்று அவர் காவல் ஆணையரிடம் கேட்டுக்கொண்டார்.
இந்தநிலையில், பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி சத்யா கொலை தொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள கருத்து பலராலும் பகிரப்பட்டு வருகிறது. அவர் தனது ட்விட்டரில்,
“சத்யாவை கொன்று சத்யாவின் அப்பாவின் தற்கொலைக்கு காரணமான சதீஷை, பொறுமையாக விசாரித்து 10 வருஷத்துக்கு அப்புறம் தூக்குல போடாமல், தயவு செய்து, உடனே விசாரித்து,
ரயில்ல தள்ளி விட்டு தண்டிக்கும் படி, சத்யாவின் சார்பாக பொது மக்களில் ஒருவனாக, நீதிபதி அவர்களை கெஞ்சி கேட்டு கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
பெரும்பாலும் குற்றச்சம்பவங்கள் நடக்கும்போது அந்த வழக்குகளில் காட்டப்படும் தீவிரம் சில நாட்களிலேயே குறைந்துவிடுவது வழக்கமாக இருக்கிறது. குற்றச்செயல்களை புரிந்தவர்களும் ஜாமீன் பெற்று வெளியே வந்துவிடுகிறார்கள்.
எனவே இனி வரும் காலங்களிலாவது குற்றம் செய்தவர்களுக்கு உரிய தண்டனை, அதுவும் உடனடியாக கிடைக்கும்படி செய்தால் தான் இனி தவறு செய்ய நினைப்பவர்கள் அஞ்சுவார்கள் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
விஜய் ஆண்டனியின் கோரிக்கை பொது சமூகத்தின் உடனடி உணர்வை வெளிப்படுத்துவதாக இருந்தாலும்… நீதிமன்றத்தில் முறையான விசாரணை நடைபெற்ற பின்னர், தண்டனை உள்ளிட்ட விஷயங்கள் நீதிபதியால் முடிவு செய்யப்படும் என்பதே சட்ட ரீதியான எதார்த்தம்!
கலை.ரா
மாஜி அமைச்சர் வீட்டுக்கு சென்றது, ஏன்? நடிகை சாந்தினி பேட்டி