சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக விக்டோரியா கௌரி இன்று (பிப்ரவரி 7) பதவியேற்றார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்ப 8 பேரின் பெயர்களை மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்தபோது, மதுரை உயர்நீதிமன்றத்தில் சொலிசிட்டர் ஜெனரலாக உள்ள விக்டோரியா கௌரியை நியமிக்கப் பரிந்துரைக்கப்பட்டது.
இவர் பாஜக மகிளா மோர்ச்சாவின் தேசிய பொதுச்செயலாளராக இருந்துள்ளார் என்றும் சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசியதாகவும் அதனால் இவரை நீதிபதியாக நியமிக்கக்கூடாது என்று 21 வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்ற கொலிஜியத்திற்கும், குடியரசுத் தலைவருக்கும் கடிதம் அனுப்பினர்.
இந்தநிலையில் நேற்று விக்டோரியா கெளரி உள்பட ஐந்து பேரை சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ நியமித்தார்.
விக்டோரிய கௌரி இன்று (பிப்ரவரி 7) சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக பதவியேற்கவிருந்த நிலையில், நீதிபதியாக நியமிக்கப்பட்டதற்கு எதிராக வழக்கறிஞர் ராஜூ ராமச்சந்திரன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இதனை அவசர வழக்காக இன்று விசாரித்த உச்சநீதிமன்றம் விக்டோரியா கௌரி நீதிபதியாக பதவியேற்க அனுமதி வழங்கி, வழக்கை தள்ளுபடி செய்தது.
இதனைத் தொடர்ந்து உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக விக்டோரியா கௌரி பதவியேற்றார். சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இதனிடையே விக்டோரியா கௌரி நீதிபதியாக பதவியேற்பதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மோனிஷா
விக்டோரியா நீதிபதி வழக்கு: தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!