கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த விழாவில் நாட்டின் அரசியல் தலைவர்கள், திரை நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் பங்கேற்பர்.
இந்த நிலையில் இந்தாண்டு மகாசிவராத்திரி விழா இன்று (மார்ச் 8) மாலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த விழாவில் துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் தனது மனைவி சுதேஷ் தன்கருடன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார். அவர் இந்த விழாவில் பங்கேற்க சுமார் 4 மணி நேரம் ஒதுக்கியுள்ளார்.
மேலும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் திரிபுரா ஆளுநர் இந்திரசேனா ரெட்டி ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டுள்ளனர்.
பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தும் (இவர் தனது பதவியை ராஜினாமா செய்தும், இன்னும் அவரது ராஜினாமா ஏற்றுக்கொள்ளவில்லை) விழாவில் பங்கேற்க வந்துகொண்டிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு சுமார். 1.25 லட்சம் இருக்கைகள் போடப்பட்டுள்ளன. முக்கிய பிரபலங்கள் அமர்வதற்காக D வரிசை ஒதுக்கப்பட்டுள்ளது.
ஈஷா யோகா மையத்திற்கு மாலை வந்த துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கரை வரவேற்ற சத்குரு, அவரை அங்குள்ள முக்கிய இடங்களுக்கு அழைத்து சென்று அங்கு நடைபெற்ற வழிபாட்டில் பங்கேற்க செய்தார்.
தொடர்ந்து ஆதியோகி சிலை முன் அமைக்கப்பட்டுள்ள மேடை இருக்கையில், துணை ஜனாதிபதி மற்றும் அவரது மனைவி, தமிழ்நாடு திரிபுரா ஆளுநர்களுடன் சத்குரு ஆகிய 5 பேரும் அமர்ந்தனர்.
தேசிய கீதத்துடன் தொடங்கிய சிவராத்திரி விழாவில் முதலில் யோகிகளின் மகா ஆர்த்தி வழிபாடு நடைபெற்றது.
இந்த விழாவில் தமிழ்நாடு அமைச்சர் மெய்யநாதன், தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நடிகை பூஜா, ஏடிஜிபி மகேஷ் குமார் அகர்வால் உட்பட பல முக்கிய பிரமுகர்களும் பங்கேற்றுள்ளனர். அவர்கள் அனைவரும் அமர முக்கிய பிரமுகர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள கேலரியில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஈஷா யோகா மையத்தில் நடைபெற்று வரும் மகா சிவராத்திரி விழா நாளை காலை 6 மணி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வணங்காமுடி
INDvsENG : 147 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறை… இந்திய வீரர்கள் அபார சாதனை!
Metro : சென்னையின் முக்கிய ‘சாலையில்’ போக்குவரத்து மாற்றம்!