சென்னை பல்கலையில் சாதிப் பாகுபாடு: துணைவேந்தர் மீது முதல்வரிடம் புகார்!

தமிழகம்

துணைவேந்தராக பேராசிரியர் கௌரி பதவி ஏற்றது முதல் சென்னை பல்கலைக்கழகத்தில் சாதிய பாகுபாடுகள், சமூக நீதிக்கு எதிரான செயல்பாடுகள், சட்ட மீறல்கள் அரங்கேறி வருவதாக தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில பொதுச்செயலாளர் கே.சாமுவேல்ராஜ் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் இன்று (ஆகஸ்டுஇ 22) எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், “சென்னை பல்கலைக்கழகம், தொலை தூர கல்வி நிறுவனத்தில் 23 உதவிப் பேராசிரியர் பதவிகளுக்கான தற்காலிக நியமனத்திற்கான (120 +120 நாட்களுக்கான நியமனம்) வெளியிடப்பட்ட அறிவிக்கையில் எஸ்.சி, எஸ்.சி (அ) எஸ்.டி, பி.சி, எம்.பி.சி உள்ளிட்ட பிரிவினருக்கான இட ஒதுக்கீடு பற்றி எதுவுமே குறிப்பிடப்படவில்லை.

45 நாட்களுக்கு மேலான தற்காலிக பணி நியமனங்களுக்கும் இட ஒதுக்கீடு நடைமுறை பின்பற்றப்பட வேண்டுமென்ற வழிகாட்டல்கள் (DOPT OM No 36036/3/2018/15.05.2018) மீறப்பட்டுள்ளன.

சென்னை பல்கலைக் கழகத்தின் அரசியல் மற்றும் பொது நிர்வாகத் துறைத் தலைவராக கடந்த ஆண்டு ஜூலை 1ம் தேதி பதவி ஏற்ற பட்டியல் சாதி பெண் பேராசிரியருக்கு ஓராண்டு காலம் ஆகியும் துறைத் தலைவர் அறை வழங்கப்படவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “தரமணி வளாகத்திலுள்ள மருத்துவ உயிர் வேதியல் துறையில் உள்ள பட்டியல் சாதியை சார்ந்த இணைப் பேராசிரியர் ஒருவருக்கு அனைத்து தகுதிகள் இருந்தும் பேராசிரியர் பதவி உயர்வு வழங்கப்படவில்லை. அப்பட்டமான சாதிய பாரபட்சம் அரங்கேற்றப்பட்டுள்ளது.

மெரினா வளாகத்தில் இந்தித் துறையில் பணியாற்றும் ஒரு பட்டியல் சாதி பெண் ஆசிரியருக்கு பிராமண வகுப்பை சேர்ந்த துறைத் தலைவரால் சாதிய பாகுபாடும், துன்புறுத்தல்களும் இருக்கிறது என்று அவர் புகார் செய்தால் அதன் மீது நடவடிக்கை எடுக்காமல் புகார் செய்தவரை தொலை தூர கல்வி நிறுவனத்திற்கு துணை வேந்தர் மாற்றினார்.

சம்பந்தப்பட்ட பெண் பேராசிரியர் எதிர்ப்பு தெரிவித்ததால் அவருடைய இட மாற்றல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கிண்டி வளாகத்தில் உள்ள கோட்பாட்டு இயற்பியல் துறையில் ஒரு பட்டியலினத்தை சேர்ந்த உதவி பேராசிரியர் பட்டியல் சமூகத்தினருக்கான தேசிய ஆணையத்தில் அந்த துறையின் தலைவர் மீது புகார் அளித்தார்.

அதன் மீது சென்னை மாநகர காவல்துறை விசாரணை நடத்தியது. ஆனால் துணைவேந்தரின் தலையீட்டால், துறைத்தலைவர் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மாறாக, பட்டியலினத்தை சார்ந்த உதவி பேராசிரியரை சம்பந்தமே இல்லாத ஒரு துறைக்கு மாற்றி இருக்கிறார்கள்.

பல்கலைக் கழக உயர் பதவிகளான பதிவாளர், தேர்வுக் கட்டுப்பாடு அதிகாரி, தொலை தூர இயக்குனர், கல்லூரி மேம்பாட்டுக் குழு தலைவர், யு.எஸ்.ஏ.பி இயக்குனர் ஆகியவற்றிற்கு நேர்காணல்கள் நடந்து முடிந்துள்ளன.

துணை வேந்தரின் அணுகுமுறையால், தமிழ்நாடு அரசின் உடனடி தலையீடு இல்லாவிட்டால், இதில் எந்தப் பதவிக்கும் பட்டியல் சாதி பேராசிரியர்கள் நியமனம் பெறமாட்டார்கள் என்ற சந்தேகம், அவ நம்பிக்கை நிலவுகிறது.

Vice Chancellor

பல துறைகளில் அனுபவம் வாய்ந்த, பட்டியல் சாதி பேராசிரியர்கள் அவமானத்திற்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.

அவர்களுக்கு தகுதியும் ஆற்றலும் இருந்தும் எந்த பொறுப்பும் முக்கியத்துவமும் வழங்கப்படுவதில்லை என்ற குமுறல்கள் உள்ளன. பல்கலைக் கழகத்தில் உள்ள ஆட்சி மன்றக் குழு, பேரவை மற்றும் கல்வி அலுவல் குழுக்களை துணை வேந்தர் சிறிதளவும் மதிப்பதில்லை.

தன்னிச்சையான முடிவுகளை திணிப்பதையே வாடிக்கையாக அவர் வைத்துள்ளார். குறிப்பாக ஆட்சி மன்றக் குழு மாதம் ஒரு முறை நடைபெற்று வந்த வழக்கத்தை இவர் உடைத்துவிட்டார்.

இவர் பதவிக்கு வந்த காலத்தில் இருந்து மூன்று அல்லது நான்கு மாதமாக கால இடைவெளியாக நீண்டு விட்டது. அக் கூட்டங்களிலும் யாரையும் சுதந்திரமாக பேச அனுமதிப்பதில்லை.

குறிப்பாக பட்டியலினப் பேராசிரியர்கள் கேள்விகளை எழுப்பினால் தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி பழி வாங்குகிறார் என்ற குற்றச் சாட்டுக்கள் உள்ளன.

துணை வேந்தர் பேராசிரியர் கௌரி ஆகஸ்ட் 2020 இல் பதவி ஏற்ற காலத்தில் இருந்து இத்தகைய சாதிய பாகுபாடுகள் சட்டத்தை மீறி, மரபுகளை மீறி வெளிப்படைத்தன்மை இல்லாமல் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.

165 ஆண்டு பாரம்பரியம்மிக்க சென்னைப் பல்கலைகழகத்தில் இத்தகைய சாதிய பாகுபாடுகள், சமூக நீதிக்கு எதிரான செயல்பாடுகள், சட்ட மீறல்கள் அரங்கேறுவதை தடுக்க உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு வேண்டுகிறோம்” என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி உடனடி நடவடிக்கை எடுப்பாரா?

கிறிஸ்டோபர் ஜெமா

எஸ்.சி. எஸ்.டி. வழக்குகள் : காவல்துறை அலட்சியம்!

+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

2 thoughts on “சென்னை பல்கலையில் சாதிப் பாகுபாடு: துணைவேந்தர் மீது முதல்வரிடம் புகார்!

  1. சாதி பாகுபாடு பார்ப்பது அனைத்து ஆதிக்க சாதியினரிடமும் உள்ளது…

  2. அவர் அந்தணர் அல்லர்..மற்றும் தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மறவர்மகளத்தில் முதல் தலைமுறை பட்டதாரியான கௌரி, 11 ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்தவர். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் BE முடித்த அவர், ஐஐடி மெட்ராஸில் MTech மற்றும் PhD பெற்றார். தொழில்நுட்பக் கல்வி அமைப்பு மேம்பாடு, துல்லிய இயந்திரம், விரைவான முன்மாதிரி, FEA, பயோமெடிக்கல் இன்ஜினியரிங், மருத்துவப் பட பகுப்பாய்வு மற்றும் ஷேப் மெமரி அலாய்ஸ் ஆகியவை அவரது ஆர்வமுள்ள பகுதிகளாகும்.

Comments are closed.