மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மிக குறைந்த அளவிலான நிதியை மத்திய அரசு ஒதுக்கி இருப்பது ஆர்டிஐ தகவல் மூலம் தெரியவந்துள்ளது.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று 2015ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு 2018 ஆம் ஆண்டு தோப்பூரில் இடம் தேர்வு செய்யப்பட்டது. 2019 ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
ஆனால் நான்காண்டுகள் கடந்தும் சுற்றுச்சுவர் தாண்டி அவ்விடத்தில் ஒரு செங்கல் கூட வைக்கப்படவில்லை. ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கான வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
விரைவில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டிமுடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வரும் நிலையில், அது தொடர்பாக மத்திய அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மத்திய பட்ஜெட்டிலும் இது தொடர்பாக அறிவிக்கப்படவில்லை.
இதனிடையே மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான மொத்த திட்டத்தொகை 1977.8 கோடி ரூபாய் என்றும் இதில் மொத்த நிதியில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த நிதி நிறுவனமான ஜைக்கா 82 சதவிகிதமும் மத்திய அரசு 18 சதவிகிதமும் வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் ஜைக்கா நிறுவனம் 1621.8 கோடி ரூபாய் கடன் வழங்க இருப்பதாகவும் மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டது.
இந்த நிலையில் மற்ற மாநிலங்களில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைகளை காட்டிலும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மிக மிக குறைந்த அளவிலான நிதியை மத்திய அரசு ஒதுக்கி இருப்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரிய வந்துள்ளது.
விஜயவாடாவை சேர்ந்த ரவிகுமார் என்பவர் கேட்ட தகவலின் அடிப்படையில் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் பிப்ரவரி 20 ஆம் தேதி இந்த தகவலை அளித்துள்ளது.
அதன்படி, உத்தரப் பிரதேச மாநில ரேபரேலி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மொத்த திட்டத்தொகையான ரூ.832 கோடியில், ரூ.665 கோடியும்,
ஆந்திரப் பிரதேசத்திற்கு ரூ.1,618 கோடியில் ரூ.1,289.62 கோடியும்,
மகாராஷ்டிராவிற்கு ரூ.1577 கோடியில் ரூ.1,218.92 கோடியும்,
மேற்கு வங்கத்திற்கு ரூ.1,754 கோடியில் ரூ.1,362 கோடியும்,
உத்தரப் பிரதேசம் கோரக்பூர் எய்ம்ஸுக்கு ரூ.1,011 கோடியில், ரூ.874.38 கோடியும்,
பஞ்சாப் எய்ம்ஸுக்கு ரூ.925 கோடியில், ரூ.788.62 கோடியும்,
இமாச்சல் பிரதேசத்திற்கு ரூ.1,471.04 கோடியில் ரூ.1,407.93 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மொத்தம் 16 எய்ம்ஸ் மருத்துவமனைகளில் தெலங்கானா மற்றும் தமிழகத்துக்கு மிகக் குறைவாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மதுரை எய்ம்ஸுக்கு 1977.8 கோடி ரூபாயில், வெறும் 12.35 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தெலங்கானாவுக்கு 1365.95 கோடியில் 156.01 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதில் மதுரை எய்ம்ஸ் 2026ல் கட்டி முடிக்கப்படும் வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
பிரியா
ஆதார் விவகாரம்: அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு!
நாகாலாந்து மேகாலயா தேர்தல்: 1 மணி நிலவரம்!