தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கன முதல் மிககனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் இன்று (நவம்பர் 9) செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன்,
“தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள இந்திய வங்கக்கடல் பகுதியில் இன்று(நவம்பர் 9) காலை குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது.
இது அடுத்து வரும் 48 மணி நேரத்தில் சற்று வலுப்பெறக்கூடும்.
நவம்பர் 12 ஆம் தேதி வரை வடமேற்கு திசையில் தமிழகம், புதுச்சேரி நோக்கி நகரக்கூடும்.
இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று(நவம்பர் 9) ஒரு சில பகுதிகளிலும், 10 ஆம் தேதி அநேக இடங்களிலும், 11,12,13 ஆகிய தேதிகளில் பெரும்பாலான இடங்களிலும் மழை பெய்யக்கூடும்.
கனமழையை பொறுத்தவரை 9,10 ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களிலும், 11,12 ஆகிய தேதிகளில் ஒரு சில இடங்களில் கன முதல் மிககனமழை பெய்யக்கூடும்.
13 ஆம் தேதி ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக காரைக்காலில் 6 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொறுத்தவரை நவம்பர் 12 ஆம் தேதி வரை குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தமிழக கடற்கரைப் பகுதிகள்,
தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், தென்மெற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய வங்க,
மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்றானது மணிக்கு 45 கி.மீ முதல் 55 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.
இந்தப்பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும். எனவே மீனவர்கள் 12 ஆம் தேதி வரை இந்தப் பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சென்னை மற்றும் புறநகரைப் பொறுத்தவரை 10 ஆம் தேதி நகரின் ஒரு சில பகுதிகளில் கனமழையும், 11, 12 ஆகிய தேதிகளில் ஒரு சிலப்பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், 13 ஆம் தேதி ஒரு சில பகுதிகளில் கனமழையும் பெய்யக்கூடும்” என்று தெரிவித்தார்.
வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியானது புயலாக வலுப்பெற வாய்ப்பு இல்லை என்றும் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
கலை.ரா
தமிழகத்தில் அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதி எது?
ஆளுநர் மீது புகார்களை அடுக்கிய திமுக, கூட்டணி கட்சிகள்!