Verdicts in Tamil Rs 3 crore allocation

தமிழில் தீர்ப்புகள் : ரூ 3 கோடி ஒதுக்கீடு!

தமிழகம்

சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட மூன்று கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நீதிமன்றங்கள் வழங்கும் தீர்ப்புகள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் அவற்றை மாநில மொழிகளில் வழங்க வேண்டும் என்று கோரிக்கை மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 28) தமிழக முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதில், “1968-ஆம் ஆண்டு ஜனவரி மாதம், அண்ணா தமிழ்நாடு முதலமைச்சராக இருந்தபோது ‘இருமொழிக் கொள்கை’ தீர்மானம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

அன்றில் இருந்து இன்று வரை தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே பின்பற்றப்பட்டு வருகிறது.

தமிழைச் சட்ட ஆட்சிமொழியாகக் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில், அதற்காகத் தயாராகும் வகையில், மாநிலச் சட்ட ஆட்சிமொழி ஆணையம் மற்றும் சட்டத்துறையின் தமிழ்ப்பிரிவு மூலமாகத் தமிழில் சட்டச் சொற்களஞ்சியம் தயாரித்து அச்சிடுவது, மாநில மற்றும் ஒன்றியச் சட்டங்கள், அவசரச் சட்டங்கள் மற்றும் அவற்றின்கீழ் வகுக்கப்பட்ட விதிகள் மற்றும் அறிவிக்கைகளையும் தமிழில் மொழிபெயர்த்தல் ஆகிய பணிகளைத் தமிழ்நாடு அரசின் சட்டத்துறை செய்து வருகிறது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும் என்று குரல் கொடுத்து அதற்கான முயற்சிகளை எடுத்து வந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் .

அவரது நூற்றாண்டு விழாவைக் கொண்டாடிவரும் இந்தத் தருணத்தில் தமிழைச் சட்ட ஆட்சி மொழியாக்கும் அவரது கனவை நனவாக்கவும், அனைத்து மக்களுக்கும் சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புகள் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தோடும் மாநிலச் சட்ட ஆட்சிமொழி ஆணையத்தின் மூலமாக சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்து அவற்றைப் பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்களது பயன்பாட்டிற்காகக் கொண்டுசெல்ல வேண்டும் என்று கலைஞரின் வழிநடக்கும் நமது அரசு முடிவு செய்துள்ளது.

இப்பணிக்காக மாநிலச் சட்ட ஆட்சிமொழி ஆணையத்திற்கு முதற்கட்டமாக மூன்று கோடி ரூபாயும், பின்னர் தேவைக்கேற்ப நிதி ஒதுக்கீடு செய்யவும் உத்தரவிட்டுள்ளேன்.

“தொண்டு செய்வாய் தமிழுக்குத் துறைதோறும் துறைதோறும் துடித்தெழுந்தே” என்று பாவேந்தர் காட்டிய வழியில் செம்மொழித் தமிழுக்குச் சட்டத்துறையிலும் உரிய இடத்தைப் பெற்றுத் தருவோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரியா

சுயமரியாதை திருமணங்கள் : உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

லிவிங் டு கெதர்: குக்கரால் காதலி அடித்து கொலை… காதலன் கைது!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *