ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு!

Published On:

| By Kavi

ஜல்லிக்கட்டு அவசர சட்டத்துக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று (மே 18) தீர்ப்பு வழங்குகிறது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அலங்காநல்லூர், பாலமேடு உள்ளிட்ட பகுதிகளில் தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். இந்நிலையில் காளைகள் துன்புறுத்தப்படுவதாக பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்கப்பட்டது.

இதைக்கண்டித்துக் கடந்த 2017ஆம் ஆண்டு சென்னை மெரினா உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்கள் தன்னெழுச்சியாக போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்குத் தமிழக அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்தது.

அதன்படி, ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வரும் நிலையில், இந்த அவசரச் சட்டத்தை ரத்து செய்யக்கோரி விலங்குகள் நல ஆணையம், பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தன.

இந்த வழக்கை நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில், ‘சட்டம் இயற்றப்பட்டது என்பதற்காக விலங்குகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்த அனுமதிக்கக் கூடாது’ என்று வாதிடப்பட்டது.

இதற்கு நீதிபதிகள் குத்துச்சண்டை, வாள்சண்டை போட்டிகளில் காயங்கள் ஏற்படும் என தெரிந்துதான் கவனத்துடன் வீரர்கள் பங்கேற்கிறார்கள். ஆனால் விலங்குகளுக்கு சட்டப்படி இந்த சுதந்திரம் உள்ளதா என்பதை முடிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர்.

இவ்வழக்கில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சார்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளைகள் துன்புறுத்தப்படவில்லை என்ற தமிழ்நாடு அரசு வாதம் போலியானது என்று பீட்டா தெரிவித்தது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருந்தனர்.

இந்நிலையில் ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பிரியா

நீலகிரி: ஹெலிகாப்டர் சுற்றுலாவுக்குத் தடை!

அக்கவுண்ட் லாக் ஆனதாக வரும் எஸ்எம்எஸ்: உண்மை நிலை என்ன?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share