வேங்கைவயல் மேல் நிலை தண்ணீர் தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரத்தில், 8 பேரிடம் இருந்து இன்று (ஜூலை 5) ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரம் கடந்த 2022 டிசம்பர் மாதம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த வழக்கை தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இதுவரை கிட்டத்தட்ட 150-க்கும் மேற்பட்டோரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
நீர்த்தேக்க தொட்டி மற்றும் குடிநீர் குழாயில் இருந்து எடுக்கப்பட்ட நீரின் கூறுகள், டி.என்.ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதில், நீர்த்தேக்க தொட்டி குடிநீரில் ஒரு பெண் மற்றும் இரு ஆண்களின் மனித கழிவு கலந்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்தது. மேலும் குடிநீர் தொட்டியில் இருந்த கழிவும், குழாயில் வந்த கழிவும் வெவ்வேறானவை என்று ஆய்வில் கூறப்பட்டது.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் சந்தேகத்திற்குரிய 11 பேரிடம் டி.என்.ஏ பரிசோதனை நடத்த சிபிசிஐடி போலீஸுக்கு புதுக்கோட்டை மாவட்ட எஸ்சி, எஸ்டி சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்தது.
ஆனால் கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற டி.என்.ஏ சோதனைக்கு 3 பேர் மட்டுமே வருகை தந்ததால் அவர்களிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்விற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
டி.என்.ஏ பரிசோதனைக்கு 8 பேர் ஆஜராகாதது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயந்தி, சம்பந்தப்பட்ட 8 பேரும், ஜூலை 5-ம் தேதி காலை (இன்று) டி.என்.ஏ பரிசோதனைக்கு ஆஜராக வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.
அதன்படி டிஎன்ஏ பரிசோதனைக்கு முதலில் உடன்பட மறுத்த 8 பேரும் நீதிமன்ற உத்தரவுப்படி புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு இன்று காலை வந்திருந்தனர்.
இதையடுத்து 8 பேரிடம் இருந்தும் டி.என்.ஏ. பரிசோதனைக்கு ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டது. இந்த ரத்த மாதிரியை அங்கிருந்து சென்னையில் உள்ள ஆய்வகத்திற்கு சிபிசிஐடி போலீசார் அனுப்பி வைக்க உள்ளனர்.
மோனிஷா
’நோ என்ட்ரி’: மெரினா சர்வீஸ் சாலை மூடல்!
மதுரை கலைஞர் நூலகம்: சிறப்பம்சங்கள் – புகைப்பட தொகுப்பு!