வேங்கைவயல் விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவரின் பாட்டி உயிரிழந்த நிலையில், அவரின் உடலை சாலையில் வைத்து கிராம மக்கள் இன்று(ஜனவரி 30) போராட்டம் நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Vengaivayal people protest
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் மேல்நிலை குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் சுதர்சன், முத்துகிருஷ்ணன், முரளிராஜா ஆகிய மூவர் மீது சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக, விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சிபிஐ விசாரணையை கோரி வருகின்றனர்.
இதற்கிடையே வேங்கைவயல் பகுதியில் போராட்டம் நடத்த அரசியல் கட்சியினர், பிற ஊர்மக்கள் என யாரும் வந்துவிட கூடாது என்பதற்காக கிராமத்தை சுற்றி அனைத்து இடங்களிலும் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்

இந்த நிலையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மூவரில் ஒருவரான முரளிராஜாவின் பாட்டி கருப்பாயி வயது முதிர்வு காரணமாக இன்று மதியம் 12 மணியளவில் காலமானார். அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த பக்கத்து கிராமங்களில் இருந்து உறவினர்கள் வந்தனர். ஆனால் அவர்களை ஊருக்குள் விடாமல் போலீசார் தடுப்பதாக புகார் எழுந்துள்ளது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள கிராம மக்கள், மூதாட்டியின் உடலை நடு சாலையில் வைத்து கண்ணீருடன் போராட்டம் நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.