வேங்கைவயல்… ஒரு வழியாய் அவிழ்ந்த முடிச்சு! அந்த மூவரில் ஒருவர் போலீஸ்: அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!

Published On:

| By vanangamudi

தமிழ்நாட்டு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள வேங்கைவயல் வழக்கில் மூன்று பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு இன்று  (ஜனவரி 24) தெரிவித்துள்ளது.

கடந்த 2022 டிசம்பர் 26 ஆம் தேதியன்று புதுக்கோட்டை மாவட்டம் முடுகாடு ஊராட்சிக்கு உட்பட்ட வேங்கை வயல் கிராமத்தில் பட்டியல் இன மக்கள் வசிக்கும் பகுதியில் அமைந்த, மேல்நிலை குடிநீர் தேக்கத் தொட்டியில் மனித மலம் கலந்திருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தமிழ்நாடு அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள், கூட்டணிக் கட்சிகள் என பலரும் கண்டனக் குரல்களை தெரிவித்தார்கள். இந்திய அளவிலும் இது பேசுபொருளானது.

இந்த வழக்கு சிபிசிஐடி போலீஸாரிடம் ஒப்படைக்கப்படது.  சிபிசிஐடி  எஸ்.பி. .சண்முக பிரியா மேற்பார்வையில் திருச்சி டி.எஸ்,பி. பால்பாண்டி தலைமையிலான டீம் இதை விசாரித்து வந்தது. பிறகு தஞ்சாவூர் டி.எஸ்,பி. கல்பனா தத் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

இதற்கிடையில் இந்த விவகாரம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி சத்தியநாராயணன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டது. புதுக்கோட்டைக்கே வந்து கள விசாரணை செய்த ஆணைய தலைவர் சத்தியநாராயணன்,

“வேங்கையலில் உள்ள குடிநீர் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்டது 2022  டிச.26-ம் தேதி தெரியவந்தது. ஆனால், அதற்கு முன் எப்போது அது கலக்கப்பட்டது என தெரியவில்லை. அதற்கு முன்பு டிசம்பர் 22 ஆம் தேதி குடிநீர் தொட்டியை சுத்தப்படுத்தியிருக்கிறார்கள்” என்று தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கின் மீதான விசாரணை ஆமை வேகத்தில் நகர்வதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்த நிலையில்தான்… இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை கேட்ட வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று  (ஜனவரி 24) விசாரணைக்கு வந்தது.

தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் அமர்வில் இன்று  விசாரணைக்கு வந்தபோது தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், “வழக்கின் விசாரணை தற்போது முடிந்துவிட்டது. முரளிராஜா, சுதர்சன் மற்றும் முத்துக்கிருஷ்ணன் ஆகியோருக்கு எதிராக புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.”  என நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

வேங்கைவயல் வழக்கே மிகவும் சென்சிடிவ் ஆன வழக்கு என்பதால், இந்த குற்றப்பத்திரிகையில் என்னென்ன தகவல்கள் இருக்கின்றன என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றப்பத்திரிகை என்பது புகார் தாரருக்கும், எதிரிக்கும் மட்டுமே வழங்கப்படும் ஆவணமாகும்.

இந்நிலையில் வேங்கை வயல்  விவகாரத்தில் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றிருக்கும் தகவல்கள் பற்றியும் விசாரணை பற்றியும் சிபிசிஐடி வட்டாரத்தில் மிகத் தீவிரமாக விசாரித்தோம். அதில் மேலும்  அதிர்ச்சி தரத்தக்க முக்கிய  தகவல்கள் கிடைத்துள்ளன,

“ஜனவரி 20 ஆம் தேதி புதுக்கோட்டை  நீதிமன்றத்தில் முரளி ராஜா, சுதர்சனன், முத்துகிருஷ்ணன் ஆகிய மூவர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த மூவரும் பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுதான் குறிப்பிடத்தக்கது.

நூற்றுக்கணக்கானோரிடம் வருடக் கணக்கில் விசாரணை நடத்திய பிறகு பல்வேறு பலத்த வடிகட்டல்களுக்குப் பிறகு இந்த மூவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் இன்னொரு அதிரவைக்கும் முக்கிய செய்தி என்னவென்றால், இந்த மூவரில் முரளி ராஜா தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றுபவர் என்பதுதான்.  முரளிராஜா 2013 பேட்ச்  முதல் நிலை காவலராக புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி காவல்நிலையத்தில் பணியாற்றி வருகிறார்.

இந்த வழக்கு  பல கொலை வழக்குகளை விட சென்சிடிவ் ஆன வழக்காக கருதப்படுகிறது. இந்த விவகாரத்தில் சமுதாய ரீதியான பதற்றங்களும் கலந்திருக்கின்றன. அதனால் சட்ட ரீதியாகவும் சரி, விசாரணை ரீதியாகவும் சரி மிகுந்த நிதானத்தோடும் கவனத்தோடும் விசாரிக்க வேண்டியிருந்தது.

2022 டிசம்பர் 26 ஆம் தேதி குடிநீர் தொட்டியில் மலம் கலந்திருந்ததாக அறியப்பட்டது. ஆனால் அது எப்போது, யாரால் கலக்கப்பட்டது என்பதுதான் பெரும் கேள்வியாக இருந்தது. இதற்கு நேரடி சாட்சி கிடையாது, சிசிடிவி ஃபுட்டேஜ் கிடையாது. விஞ்ஞான ரீதியாக சோதனைகள் தேவைப்பட்டன.

இதையெல்லாம் தாண்டி சிபிசிஐடி போலீஸார் இந்த விவகாரத்தை வெகு கவனமாக கையாண்டனர்.  ஏனென்றால் அந்த கிராமத்தில் பட்டியல் சமுதாய மக்கள் ஒரு பக்கமும், முத்தரையர்-முக்குலத்து சமுதாய மக்கள் இன்னொரு பக்கமும் வசித்து வருகிறார்கள்.  குடிநீர் தொட்டி பட்டியல் சாதியினர் வசிக்கும் பகுதியில் அமைந்துள்ளது.

இந்த கிராமத்தில்  பட்டியல் சமுதாய மக்கள் எத்தனை பேர், மற்ற சமுதாய மக்கள் எத்தனை பேர் என்று  சிபிசிஐடி போலீசார் கணக்கெடுத்தனர்.  குடிநீர் தொட்டி  அருகேயோ மேலேயோ மற்ற சமுதாயத்தினர் இதுவரை வந்திருக்கிறார்களா என்று விசாரித்தனர்.

மொத்தம் 250 பேருக்கு மேல் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர், இந்த 250 பேரிடம் விசாரித்ததில்  48 பேரிடம் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டது. அந்த 48  பேர்களில் இறுதியாக 18 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களிடம் மீண்டும் விசாரணை நடந்தது.  இப்படி படிப்படியாக பல வடிகட்டல்கள் செய்து சிபிசிஐடி போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையின் இறுதியாகத்தான் முரளிராஜா, சுதர்சனன், முத்துகிருஷ்ணன் ஆகியோர் மீது கடுமையான சந்தேக வளையம் விழுந்தது. அவர்களிடம் விசாரித்தபோதுதான் நடந்தது தெரியவந்தது.

வேங்கைவயலில் ஒரு பிறந்தநாள் பார்ட்டி  நடந்திருக்கிறது. இதற்கான மது விருந்து குடிநீர் தொட்டியின் மேல் பகுதியில்தான் நடந்திருக்கிறது.  அதில் சுமார் 15 பேர் வரை பங்கேற்றனர். வேங்கைவயலில் குடிநீர் தொட்டி மீது ஏறி  மேல் பகுதியில் அமர்ந்து மது அருந்தும் பழக்கம் அப்பகுதி இளைஞர்களிடையே இருந்துள்ளது. இரவு நீண்ட நேரம் மது அருந்தினாலும் யாரும் கேட்கமாட்டார்கள். அப்படியே மேலேயே தூங்கிவிடலாம் என்பதால் குடிநீர் தொட்டியின் மேல் பகுதியை மது அருந்தும் இடமாக பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.

அப்படித்தான் முரளிராஜா, சுதர்சனன், முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட 15 பேர்  இரவு குடிநீர் தொட்டியின் மீது ஏறி பிறந்தநாள் மது விருந்து கொண்டாடியிருக்கிறார்கள். அதில் இரவே சிலர் கீழே இறங்கிவிட்டார்கள். சிலர் இரவு முழுதும் மேலேதான் இருந்திருக்கிறார்கள்.  அவர்களில் ஒருவர் செய்த வேலைதான் குடிநீர் தொட்டியிலே மலம் கழித்தது. பழிவாங்குவதற்காக இதை போதையில் செய்திருக்கிறார்கள்.

சிபிசிஐடி போலீசாரிடம் முதல் நிலை காவலர் முரளிராஜா அளித்த வாக்குமூலத்தில்,

‘இந்த டேங்க் ஆபரேட்டராக எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த சண்முகம் வேலை பார்த்து வந்தார். ஆனால் முத்துக்காடு ஊராட்சி மன்றத் தலைவர் பத்மாவின் கணவர் முத்தையா, எங்கள் ஆளான சண்முகத்தை வேலையில் இருந்து தூக்கிவிட்டார். அதற்கு பழிவாங்கும் வகையில்தான் இதை செய்தோம்’ என்று கூறியிருக்கிறார்.

26 ஆம் தேதி காலை போதை தெளிந்ததும்  முரளி ராஜா ஊருக்குள் சென்று, ‘யாரும் பைப் தண்ணி புடிக்காதீங்க. அதுல ஒரே நாத்தமா அடிக்குது’ என சொல்லியிருக்கிறார். பிறகு முரளிராஜாவும் அவர்களது நண்பர்களும் மேலே ஏறி பார்த்து, ‘குடிநீரில் மலம் கிடக்கிறது’ என்று கூறினார்கள்.

விசாரணையில் கிடைத்த தகவல் அப்போதே ஊர் மக்கள் மூலம் சிபிஎம் கட்சி நிர்வாகிகள் மூலமும் சிபிஎம் தலைமைக்கு சென்றது. உடனே சிபிஎம் குழுவினர் முதல்வரை சந்தித்து,  ‘வேங்கை வயல் விசாரணை பாதிக்கப்பட்ட பட்டியல் சமுதாய மக்களை நோக்கியே செல்கிறது’ என்று புகார் கூறினார்கள்.

அப்போதே சிபிசிஐடி மேலிடத்துக்கு இந்தத் தகவல் அனுப்பப்பட்டு, விசாரணையை நிதானமாக முன்னெடுக்கும்படி சொல்லப்பட்டது. அதனால்தான் சற்று தாமதித்தோம். தவிர உண்மை இதுதான்” என்கிறார்கள்.

திமுகவின் கூட்டணிக் கட்சிகளான சிபிஎம், விடுதலை சிறுத்தைகள் ஆகியவை இந்த குற்றப் பத்திரிகையை ஏற்கக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளன. சிபிஐ விசாரணை வேண்டுமென்று சிபிஎம் மாநில செயலாளர் பெ. சண்முகம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனால் மீண்டும் பரபரப்பாகியிருக்கிறது வேங்கை வயல். நடந்த குற்றத்துக்கு ஒரே சாட்சியாக பேரிகார்டுகளுடன் நின்றுகொண்டிருக்கிறது அந்த குடிநீர் தொட்டி.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share