இது உடலுக்குக் குளிர்ச்சி தரும் அருமருந்து வெந்தயம். கோடையில் ஏற்படும் வயிற்றுப் பிரச்னைகளிலிருந்து நிவாரணம் அளிக்கும் இந்த வெந்தயக்குழம்பை வாரத்துக்கு ஒருமுறை உணவில் சேர்த்துக் கொள்வது நல்ல பலனைத் தரும்.
என்ன தேவை?
வெந்தயம், முளைகட்டிய வெந்தயம் – தலா ஒரு டீஸ்பூன்
புளி – சிறிதளவு
தக்காளி – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
பூண்டு – 10 பல்
தோலுரித்த சின்ன வெங்காயம் – 10
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை
தேங்காய்த் துருவல் – கால் கப்
கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை – சிறிதளவு
கடுகு – ஒரு டீஸ்பூன்
தனியாத்தூள் (மல்லித்தூள்) – அரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
நல்லெண்ணெய், உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
புளியை ஊறவைத்துக் கரைக்கவும். தேங்காய்த் துருவலுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நைஸாக அரைத்தெடுக்கவும். வெறும் வாணலியில் வெந்தயத்தைச் சேர்த்து வறுத்துப் பொடிக்கவும்.
அதே வாணலியில் நல்லெண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, காய்ந்த மிளகாய் தாளிக்கவும். அதனுடன் கறிவேப்பிலை, வெங்காயம், தக்காளி, பூண்டு சேர்த்து வதக்கவும். பிறகு புளிக்கரைசல், உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள் சேர்த்து ஒரு கொதிவிடவும்.
அதனுடன் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து, அடுப்பை சிறு தீயில் வைத்து, குழம்பு சுண்டும்போது அரைத்த வெந்தயப் பொடி, முளைகட்டிய வெந்தயம், கொத்தமல்லித்தழை சேர்த்துக் கலந்து இறக்கவும்.