காட்பாடி அடுத்த குகையநல்லூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் புனித ஜோசப் கருணை இல்லத்தில் முதியோர்களை அடித்து துன்புறுத்துவது உறுதி செய்யப்பட்டதை அடுத்து கருணை இல்லத்திற்கு இன்று (அக்டோபர் 13) சீல் வைக்கப்பட்டது.
காட்பாடி அடுத்த குகையநல்லூர் கிராமத்தில் தனியார் தொண்டு நிறுவனத்தின் புனித ஜோசப் கருணை இல்லம் 2017 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்தது.
இந்த இல்லத்தில் 37 ஆண்கள், 32 பெண்கள் என மொத்தம் 69 பேர் தங்கியிருந்தனர்.
இவர்களுக்குச் சரியான உணவு மற்றும் தங்கும் வசதி இல்லை என்று புகார்கள் எழுந்தன. இந்த புகாரின் அடிப்படையில் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் ஆய்வு நடத்த உத்தரவிட்டார்.
அதன்படி, வருவாய்க் கோட்டாட்சியர் பூங்கொடி தலைமையில் காட்பாடி வட்டாட்சியர் ஜெகதீஸ்வரன், சமூகநலத் துறை அலுவலர்கள், மருத்துவர்கள் உள்ளிட்டோர் கருணை இல்லத்தில் நேற்று ( அக்டோபர் 12) திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, கருணை இல்லத்தில் இருந்த முதியவர்களுக்குச் சரியான உணவு வழங்காததும் முறையாக பராமரிக்கப்படாததும் தெரிய வந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் முதியவர்களை அடித்துத் துன்புறுத்துவதும் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தித் தீட்டியதும் தெரியவந்ததை அடுத்து முதியவர்கள் மீட்கப்பட்டனர்.
அவர்களில் 54 பேர் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் 7 பேர் வாலாஜா அரசு மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மீதமுள்ள 8 பேர் செங்கல்பட்டு தொண்டு நிறுவன இல்லத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் குமாரவேல், ”கருணை இல்லம் அரசு கட்டுப்பாட்டில் எடுத்து நடத்தப்படும். அதுவரை கருணை இல்லத்திற்கு சீல் வைக்க உத்தரவிட்டுள்ளேன்” என்று கூறியிருந்தார்.
அந்த உத்தரவின்படி இன்று (அக்டோபர் 13) காட்பாடி வட்டாட்சியர் ஜெகன், டி.எஸ்.பி. பழனி தலைமையிலான குழு கருணை இல்லத்திற்கு சீல் வைத்தது.
இதற்கு முன்பு கடந்த 2018 ஆம் ஆண்டு இந்த கருணை இல்லத்தில் முதியோர்கள் துன்புறுத்தப்படுவதாக புகார்கள் எழுந்தன. இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டதில், கருணை இல்லம் முறையான அனுமதியின்றி செயல்பட்டதாக சீல் வைக்கப்பட்டது.
பின்னர் மீண்டும் சில மாதங்கள் கழித்து கருணை இல்லம் திறக்கப்பட்டுச் செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
மோனிஷா