‘ஒன்று வாங்கினால் இன்னொன்று இலவசம்’ என அறிவித்து, கூட்டம் சேர்த்த பிரியாணி கடையை இழுத்துப் பூட்டியுள்ளார் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன்.
வேலூர், காட்பாடியில் ‘தம்பி பிரியாணி’ என்ற பெயரில், புதிதாக பிரியாணி கடை நேற்று திறக்கப்பட்டது. திறப்பு விழாவையொட்டி, ‘சிக்கனோ, மட்டனோ… ஒரு பிரியாணி வாங்கினால் இன்னொரு பிரியாணி இலவசம்’ என்ற அறிவிப்பை கடை உரிமையாளர் அறிவித்திருந்தார். இதனால், பிரியாணி பிரியர்கள் கூட்டம் கூட்டமாக கடைக்குள் முண்டியடித்து குவிந்தனர்.
வரிசை, சாலை வரை நீண்டிருந்ததால், போக்குவரத்தும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அப்போது, அந்த வழியாக வந்த மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், மக்கள் வெயிலில் அவதிப்படுவதையும், தண்ணீர் உள்ளிட்ட வசதிகள் இல்லாததையும் கவனித்தார். இதையடுத்து, தனது காரை நிறுத்தச் சொல்லி, கீழே இறங்கி வந்தார்.
பிரியாணி கடை மேலாளரை அழைத்து, ‘‘பிச்சையா போடுறீங்க… எல்லோரையும் மரியாதையாக உட்கார வைக்க முடியாதா..? எத்தனைப் பேர் நிற்கிறாங்க, பாவம்! எல்லோரையும் போகச் சொல்லுங்க. கடையை மூடுங்க’’ என்று அறிவுறுத்தினார். அப்போதும் கூட்டம் கலையாததால், போலீஸார் மூலம் கூட்டம் கலைக்கப்பட்டு, பிரியாணி கடை இழுத்து மூடப்பட்டது.
இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், ‘‘கூட்டம் கூடுவதே தவறு. அதுவும் சாப்பாட்டுக்காக கூட்டத்தை சேர்ப்பது மிகவும் தவறு. கடை உரிமையாளரிடம் விளக்கம் கேட்டிருக்கிறேன். மாநகராட்சி ஆணையரிடமும் விசாரிக்கச் சொல்லியிருக்கிறேன். அதுவரை கடையை மூட உத்தரவிட்டிருக்கிறேன்’’ என்றார்.
ஆட்சியரின் இந்தச் செயலை பலர் பாராட்டினாலும் சிலர், “ஆட்சியருக்கு டாஸ்மாக் கடைகள் கண்லபடாது போல… விழாக் காலங்களில் டாஸ்மாக் பக்கம் போகச் சொல்லுங்கள். கலெக்டர் அந்த இடத்திலும் இதை செய்வாரா?” என்று விமர்சித்து வருகின்றனர்.
ராஜ்