தொழில் போட்டி காரணமாக பைனான்சியர் ஒருவரை மர்ம நபர்கள் படுகொலை செய்த சம்பவம் வேளாங்கண்ணி பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேளாங்கண்ணியை அடுத்துள்ள தெற்கு பொய்கை நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் மனோகர். டிவிஆர் மனோகர் என்று அப்பகுதி மக்களால் அழைக்கப்படும் இவர் வேளாங்கண்ணியில் தங்கும் விடுதி ஒன்றை நடத்தி வருவதுடன் பைனான்ஸ் தொழிலையும் செய்து வருகிறார்.
தொழில் போட்டி காரணமாக இவருக்கும் ஒரு சிலருக்கும் முன்விரோதம் இருந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் நேற்றிரவு டிவிஆர் மனோகர் தனது அலுவலகத்தில் நண்பர் மணிவேலுடன் பேசிக்கொண்டு இருக்கும் போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் டிவிஆர் மனோகரை அருவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தலை, கழுத்து என பல்வேறு பகுதிகளில் சரமாரியாக தாக்கினர்.
![](https://storage.googleapis.com/minnambalam_bucket/minnambalam.com/wp-content/uploads/crime-1.jpg)
மணிவேல் இதனை தடுக்க முயலவே மர்ம நபர்கள் அவரது கையையும் அரிவாளால் வெட்டினர். இந்த சம்பவத்தில் மனோகர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நாகை எஸ்பி ஜவகர் மற்றும் காவல்துறையினர் ரத்த வெள்ளத்தில் கிடந்த பைனான்சியர் மனோகரின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
படுகாயமடைந்த மணிவேலுக்கு நாகை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
தொடர்ந்து காவல் துறையினர் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடம் நேரில் விசாரணை மேற்கொண்டதுடன், சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை அடிப்படையாக கொண்டு குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.இந்த படுகொலை சம்பவம் அப்பகுதி பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது..
- க.சீனிவாசன்