நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணியில் உள்ள பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய அன்னை ஆலயத் திருவிழா இன்று (ஆகஸ்ட் 29) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. ஆரோக்கிய மாதாவின் பெரிய தேர் பவனி வரும் செப்டம்பர் 7ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது.
உலகப் புகழ்பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றாக இருப்பது வேளாங்கண்ணி. அங்கு புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பெருவிழா நடத்தப்படுவது வழக்கம். இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான பெருவிழா இன்று (ஆகஸ்ட் 29) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதை தொடர்ந்து செப்டம்பர் 8ஆம் தேதி வரை 11 நாட்கள் நடைபெற உள்ளது.
திருவிழா நாட்களில் 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை மக்கள் வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் நாகை, திருவாரூர் உள்ளிட்ட நான்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 2,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறப்பு ரயில்களும் சுமார் 250 சிறப்புப் பேருந்துகளும் இயக்க உள்ளன.
அதுமட்டுமின்றி வேளாங்கண்ணி கடற்கரையில் திருவிழா நாட்களான ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 8ஆம் தேதி வரை பாதுகாப்பு கருதி பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
ராஜ்