வேளாங்கண்ணி புனித அன்னை ஆரோக்கியமாதா ஆலயத் திருவிழாவை முன்னிட்டு இன்று(ஆகஸ்ட் 25) முதல் செப்டம்பர் 11 ஆம் தேதி வரை 750 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
வேளாங்கண்ணி புனித அன்னை ஆரோக்கியமாதா ஆலயத் திருவிழா ஆக.29ல் கொடியேற்றத்துடன் துவங்கி செப்.8 வரை நடக்க உள்ளது.
இதற்காக ஏராளமான பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு படையெடுப்பர். இதனைப் பயன்படுத்தி தனியார் பேருந்துகள் கட்டணக் கொள்ளையில் ஈடுபடுவதுண்டு.
அண்மையில் தொடர் விடுமுறையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகள் கட்டணத்தை பன்மடங்கு உயர்த்தி அதிர்ச்சியை ஏற்படுத்தின.
அதன்பிறகு அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பாக முன்கூட்டியே சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலமாக சென்னை, பெங்களூரு, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் ஆகிய ஊர்களிலிருந்தும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலமாக திருச்சி, தஞ்சாவூர், சிதம்பரம், பாண்டிச்சேரி, திண்டுக்கல், மணப்பாறை, ஒரியூர் மற்றும் பட்டுக்கோட்டை ஆகிய ஊர்களிலிருந்தும் வேளாங்கண்ணிக்கு 750 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
இன்று(ஆகஸ்ட் 25) முதல் அடுத்த மாதம் 11 ஆம் தேதி வரை இந்தப் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர குழுவாக பயணம் செய்ய விரும்புபவர்களுக்கு ஒப்பந்த அடிப்படையிலும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
கலை.ரா
சென்னை to வேளாங்கண்ணி: சிறப்பு பஸ்கள் அறிவிப்பு!