வேளச்சேரி – மவுண்ட் (பரங்கிமலை) இடையே பறக்கும் ரயில் சேவை பணிகள் முடிவுற்று விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ள செய்தி சென்னை வாசிகளுக்கு மகிச்சியளித்துள்ளது.
சென்னையில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்துக்கு ஏராளமான மக்கள் மின்சார ரயிலில் பயணம் செய்வது வழக்கம். மேலும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக மூன்று கட்டங்களாக பணிகள் மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டு, முதற்கட்டமாக கடற்கரை டூ மயிலாப்பூர் இடையே 9 கிமீ தூரத்திற்குப் பறக்கும் ரயில் திட்டப்பணிகள் ரூ 266 கோடியில் 1997 இல் நடந்து முடிந்தன.
இரண்டாம் கட்டமாக மயிலாப்பூர் – வேளச்சேரி பறக்கும் ரயில் திட்டப் பணிகள் 877 கோடியே 59 லட்சம் ரூபாயில் கடந்த 2007ல் முடிக்கப்பட்டது. இதன் பிறகு, வேளச்சேரி – பரங்கிமலை இடையே 3 ஆம் கட்ட பணி 495 கோடி ரூபாயில் கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கியது.
வேளச்சேரி – பரங்கிமலை வரை 5 கிலோ மீட்டர் தொலைவிலான பணி 3 ஆண்டுகளில் 90 சதவீதம் வரை நிறைவடைந்தது. ஆனால் அடுத்து வந்த 13 ஆண்டுகளில் இந்த திட்டம் செயல்படுவதில் முன்னேற்றம் ஏதும் இல்லாமல் இருந்து வந்தது.
ஆதம்பாக்கம் – பரங்கிமலை இடையே 500 மீட்டர் தூரத்துக்கு நிலத்தை கையகப்படுத்துவதில் இருந்த பிரச்சனையே இதற்கு முக்கியக் காரணம். வழக்குகள் காரணமாக, பரங்கிமலை ரயில் நிலையத்தோடு இணைக்கும் பாதை பணிகள் முடங்கிப் போயின.
உச்ச நீதிமன்ற தலையீட்டுக்குப் பிறகு, சட்டப் போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதால், இறுதிக்கட்ட இணைப்பு பணிகள் வேகமெடுத்தன.
ஆனால், 495 கோடி ரூபாய் திட்டத்திற்கான மதிப்பீடு 730 கோடி ரூபாயாக உயர்ந்துவிட்டதாக கூறி, பணிகளை தொடர முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த ஆதம்பாக்கம், தில்லை கங்கா நகர் பகுதிகளில் வரிசையாக பிரமாண்டமான தூண்கள் அமைத்து, மேம்பாலம் இணைப்பு பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.
மீதமுள்ள பணிகளை ஜூலை மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ரயில்வே பாதுகாப்பு ஆணையரகத்தின் ஒப்புதல் பெற்று, ரயில் சேவையை விரைவில் தொடங்கவும் ரயில்வே அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
நீண்ட நாட்களாக எதிர்பார்ப்பில் இருந்த இந்த திட்டம் மீண்டும் செயல்படத் தொடங்கியிருப்பது சென்னை மக்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைந்திருக்கிறது.
இந்த திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு வர வேண்டும் என்று கருத்து தெரிவிக்கின்றனர். மேலும் பேருந்தில் பயணம் செய்து போக்குவரத்து நெரிசலில் சிக்கி தாமதமாவது ரயிலில் பயணிப்பதன் மூலம் தவிர்க்கப்படும். ஆட்டோவில் செல்லும் போது வசூலிக்கப்படும் அதிக கட்டணத்தில் இருந்து நிவாரணம் கிடைக்கும் என்கிறார்கள் சென்னை மக்கள்.
மோனிஷா
“தமிழ் மொழி அச்சுறுத்தப்படுவதை அனுமதிக்க மாட்டேன்” – அமெரிக்காவில் ராகுல்
”விசாரணை முடியும் வரை காத்திருங்கள்” : மத்திய அமைச்சர் பேட்டி!

உண்மையாகவே வேளச்சேரி ஆலந்தூர் வரை பறக்கும் ரெயில் திட்டம் உண்டா. நல்லது. மிகவும் நல்லது. எப்போது முடியும். எப்போது ரெயில் சேவை துடங்கும்.