சென்னை மெரினாவில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சி முடிந்து மூன்று மணி நேரத்திற்கும் மேல் ஆகியும் போக்குவரத்து நெரிசல் இன்னும் சீராகாததால் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்துள்ளனர்.
இந்திய விமானப் படை சார்பில், சென்னை மெரினாவில் இன்று (அக்டோபர் 6) விமான சாகச நிகழ்ச்சி காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 15 லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் பங்கேற்றிருப்பார்கள் என்று தெரிகிறது.
நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பேருந்து, மின்சார ரயில், மெட்ரோ ரயில்களில் பொதுமக்கள் பலரும் மெரினா நோக்கி படையெடுத்தனர். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மின்சார ரயில்கள் அரை மணி நேரத்திற்கு ஒருமுறை மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. மெட்ரோ ரயில்களும் ஞாயிறு அட்டவணைப்படி தான் இயக்கப்பட்டது.
மக்கள் அதிகளவில் கூடியதால், 3.5 நிமிடத்திற்கு ஒருமுறை வண்ணாரப்பேட்டை – ஏஜிடிஎம்எஸ் இடையே மெட்ரோ இயக்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இன்று காலை மெரினாவிற்கு வருவதற்காக வேளச்சேரி ரயில் நிலையத்தில் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் திரண்டனர்.
பொதுவாக மும்பை, பெங்களூரு உள்ளிட்ட பெருநகரங்களில் மின்சார ரயில் மற்றும் மெட்ரோ ரயில்களில் அதிகளவில் மக்கள் பயணிக்கும் வீடியோ வைரலாகும். அதேபோல, தற்போது வேளச்சேரி ரயில் நிலையத்தில் ரயில் வருகைக்காக பொதுமக்கள் காத்திருக்கும் வீடியோ இணையத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. மேலும், மின்சார ரயில் வந்தவுடன் பொதுமக்கள் பலரும் ஆர்ப்பரித்து ஆரவாரம் செய்கின்றனர்.
விமான சாகச நிகழ்ச்சி நிறைவடைந்து மூன்று மணி நேரத்திற்கு மேல் ஆகியும் போக்குவரத்து நெரிசலால் சென்னை நகரம் ஸ்தம்பித்துள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
விமான நிகழ்ச்சி: கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம்… திணறிய சென்னை
ரஜினி உடல் நிலை பாதிக்கப்பட ‘கூலி’ படம் காரணமா? லோகேஷ் விடுத்த அவசர அறிக்கை!