நாட்டில் அதிக கார்கள் திருடு போகும் நகரங்கள் குறித்த ஆய்வில், சென்னை இரண்டாம் இடம் பிடித்துள்ளது.
‘திருட்டு மற்றும் நகரம் 2024’ என்ற தலைப்பில் அக்கோ காப்பீட்டு நிறுவனம் டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் ஆகிய ஆறு நகரங்களில் ஆய்வு நடத்தி, அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில், டெல்லியில் ஒவ்வொரு 14 நிமிடத்துக்கு ஒரு வாகனம் திருடு போவதாகவும், சராசரியாக நாளொன்றுக்கு 105 வாகன திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்படுவதாகவும் அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.
சென்னையில் 2022-ம் ஆண்டு 5% ஆக இருந்த வாகன திருட்டுகள் 2023-ம் ஆண்டில் 10.5% ஆக இரட்டிப்பாகி இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.
“இந்தியாவில் வாகனத் திருட்டுகள் 2022-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2023-ம் ஆண்டில் 2.5 மடங்கு அதிகரித்துள்ளது. அதிக அளவிலான வாகனங்கள் திருடு போகும் நகரங்களில் டெல்லி தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறது.
கடந்த 2023 தரவுகளின்படி, டெல்லியின் பஜன்புரா மற்றும் உத்தம் நகர் அதிக கார் திருட்டு நடக்கும் பகுதியாக உள்ளது. மேலும், ஷஹ்தரா, பட்பர்கஞ்ச் மற்றும் பதர்பூர் ஆகிய பகுதிகளிலும் சமீப காலமாக அதிக அளவிலான வாகன திருட்டுகள் நடைபெற்றுள்ளது. குறிப்பாக செவ்வாய், ஞாயிறு மற்றும் வியாழக்கிழமைகளில் அதிக வாகனங்கள் திருடு போகியுள்ளது.
டெல்லிக்கு அடுத்தபடியாக அதிக வாகன திருட்டு நடைபெறும் நகரங்களின் பட்டியலில் சென்னை இரண்டாம் இடம் பெற்றுள்ளது. பெங்களூருவுக்கு மூன்றாம் இடம் கிடைத்துள்ளது.
ஹைதராபாத், மும்பை மற்றும் கொல்கத்தா நகரங்களில் வாகன திருட்டுகள் குறைந்து காணப்பட்டாலும், கடந்த 2022ஆம் ஆண்டை ஒப்பிடுகையில், 2023-ல் இரண்டு மடங்கு திருட்டு அதிகரித்துள்ளது” என்றும்
“இந்தியாவில் திருடப்பட்ட வாகனங்களில் 80% கார்கள் ஆகும். திருடப்பட்ட கார்களில் கிட்டத்தட்ட பாதி கார்கள் (47%) மாருதி சுஸுகி.
அதற்கடுத்து மாருதி வேகன் ஆர் மற்றும் மாருதி ஸ்விஃப்ட் கார்கள்தான் அதிக அளவில் திருடு போகிறது. அதைத் தொடர்ந்து ஹூண்டாய் க்ரெட்டா, ஹூண்டாய் கிராண்ட் ஐ10 மற்றும் மாருதி ஸ்விஃப்ட் டிசையர் ஆகியவை உள்ளன.
கட்டடங்கள், குடியிருப்புப் பகுதிகளில் வாகனங்கள் நிறுத்துவதற்கான வசதி குறைபாடு காரணமாக திருட்டுகள் அதிகமாக காணப்படுகிறது.
திருடப்படும் வாகனங்களின் பாகங்கள் பிரிக்கப்பட்டு உபயோக பொருள்கள் விற்பனை செய்யும் சந்தைகள் மூலம் எளிதாக விற்கப்படுகிறது” என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ராஜ்
பியூட்டி டிப்ஸ்: இளநரையை தடுக்க… இதிலெல்லாம் கவனம் செலுத்துங்கள்!
ஹெல்த் டிப்ஸ்: ஜிம்முக்கு செல்ல நினைப்பவரா நீங்கள்? ஒரு நிமிஷம்..!
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
கிச்சன் கீர்த்தனா : சைதாப்பேட்டை வடகறி