பொங்கல் விடுமுறையையொட்டி மது போதையில் வாகனம் ஓட்டிய 376 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் 536 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் வாகன தணிக்கை இன்றும் தொடரும் என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் வசிக்கும் பிற மாவட்டத்தினர் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்கு சொந்த ஊருக்கு சென்றுவிட்டதால் நகரின் முக்கிய சாலைகள் போக்குவரத்து நெரிசல் இன்றி இருக்கிறது.
மேலும் பல சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் இளைஞர்கள் ஈடுபட வாய்ப்பு உள்ளதை போலீசார் உணர்ந்தனர்.
எனவே பொங்கல் பண்டிகையையொட்டி 190 இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் 5,904 வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இந்தச் சோதனையில் மது போதையில் வாகனம் ஓட்டிய 376 பேர் சிக்கினர்.
அவர்கள் மீது மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக 376 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதே போல, தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுவது, இருசக்கர வாகனங்களில் இரண்டு பேருக்கு மேல் செல்லுவது உள்ளிட்ட போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்டதாக 359 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்குகளின் அடிப்படையில் 536 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இன்று காணும் பொங்கலை முன்னிட்டு சென்னை மயிலாப்பூர், கீழ்ப்பாக்கம், திருவல்லிக்கேணி, தியாகராயநகர், அடையாறு, புனித தோமையார் மலை, பூக்கடை வண்ணாரப்பேட்டை,
புளியந்தோப்பு, அண்ணாநகர், கொளத்தூர் மற்றும் கோயம்பேடு ஆகிய இடங்களில் சிறப்பு வாகன தணிக்கை குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
குடி போதையில் வாகனம் ஓட்டி வருபவர்கள் மற்றும் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் 25 சாலை பாதுகாப்பு குழுக்கள் இருசக்கர வாகனத்தில் ரோந்து சென்று பொதுமக்களுக்கு காணும் பொங்கல் அன்று பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வாகன ஓட்டிகளுக்கு உரிய அறிவுரை மற்றும் தேவையான உதவிகளையும் வழங்குவார்கள்.
இது மட்டுமின்றி கிண்டி, அடையாறு, தரமணி, நீலாங்கரை, துரைப்பாக்கம் மதுரவாயல் பைபாஸ் சாலை மற்றும் ஜி.எஸ்.டி.ரோடு போன்ற பகுதிகளில் பைக் ரேஸை தடுக்க 25 கண்காணிப்பு சோதனை குழுக்கள் தனிப்படைகளாக அமைக்கப்பட்டுள்ளன.
பைக் ரேஸ் சாகசங்களில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
வாகன தணிக்கை இன்றும் தொடரும் என்றும் பொதுமக்கள் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது உள்ளிட்ட போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட வேண்டாம் என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-ராஜ்
பிரிட்டனின் புதிய ஆயுதங்கள் போர்க்களத்தில் நிலைமையை மாற்றாது: ரஷ்யா உறுதி
”இரண்டு ஹீரோக்களுக்கு நன்றி!” – விபத்துக்கு பின் ரிஷப் பண்ட் முதல் ட்வீட்