கட்டுச்சாதங்களில் முதலிடத்தில் இருக்கும் ரைஸ், லெமன் ரைஸ். ஆனால், இதன் நிறத்தைப் பார்த்ததும் சிலர் முகம் சுளிப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு இந்த கலர்ஃபுல் லெமன் ரைஸ் ரெசிப்பி உதவும். விரும்பி சாப்பிடுவார்கள்… இன்னும் கொஞ்சம் கேட்பார்கள்.
என்ன தேவை?
உதிர் உதிராக வடித்த சாதம் – 2 கப்
கேரட் – ஒன்று
இளசான பீன்ஸ் – 10
பச்சைப் பட்டாணி – கால் கப்
எலுமிச்சைச் சாறு – கால் கப்
இஞ்சி – சிறிய துண்டு
பச்சை மிளகாய் – 4
கடுகு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்
கடலைப்பருப்பு – 3 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை – 2 ஆர்க்கு
தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
நெய்யில் வறுத்த முந்திரி – சிறிதளவு
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
கேரட், பீன்ஸ், இஞ்சி, பச்சை மிளகாயை மிகவும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். பச்சைப் பட்டாணியை சிட்டிகை உப்பு சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும். எலுமிச்சைச் சாற்றில் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கலந்துவைக்கவும்.
அடிகனமான வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து… நறுக்கிய கேரட், பீன்ஸ், இஞ்சி, பச்சை மிளகாய், வேகவைத்த பச்சைப் பட்டாணி ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும்.
பிறகு, தேங்காய்த் துருவல் சேர்த்து மேலும் வதக்கவும். இதில் பாதியளவு எலுமிச்சைச் சாற்றை ஊற்றி, ஒரு கொதி கொதிக்கவிட்டு உடனே அடுப்பை அணைக்கவும். இந்தக் கலவையை சாதத்தில் சேர்த்து, மீதம் இருக்கும் எலுமிச்சைச் சாற்றையும் சேர்த்து நன்கு கிளறி, கொத்தமல்லித்தழை, நெய்யில் வறுத்த முந்திரி தூவி பரிமாறவும்.
உருளைக்கிழங்கு காரப் பொரியல் இதற்கு சரியான ஜோடி.