ரோட்டோர நொறுக்குத்தீனி கடைகளில் மிளகாய் பஜ்ஜிக்குத் தனி ரசிகர்கள் உண்டு. அந்த மிளகாய் பஜ்ஜிக்குள் காய்கறிகளை வைத்து செய்யும் வெஜ் ஸ்டஃப்டு மிளகாய் பஜ்ஜி அனைவருக்கும் பிடித்தமானதாக இருக்கும். அதை உங்கள் வீட்டிலேயே செய்து ருசிக்க இந்த ரெசிப்பி உதவும்.
என்ன தேவை?
பஜ்ஜி செய்ய…
பஜ்ஜி மிளகாய் – 6
கடலை மாவு – ஒரு கப்
அரிசி மாவு – கால் கப்
பேக்கிங் சோடா – ஒரு சிட்டிகை
பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன்
மஞ்சள்தூள் – ஒரு டீஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப
ஸ்டஃபிங் செய்ய…
உருளைக்கிழங்கு – ஒரு கப் (வேகவைத்து தோல் உரித்து மசித்தது)
வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கவும்)
கொத்தமல்லித்தழை (அலசி ஆய்ந்தது) – 2 டேபிள்ஸ்பூன்
மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்
ஆம்சூர் பவுடர் (உலர் மாங்காய்த்தூள்) – ஒரு டீஸ்பூன்
இஞ்சித் துருவல் – ஒரு டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன்
வெந்தயக்கீரை (அலசி ஆய்ந்தது) – 3 டேபிள்ஸ்பூன்
உப்பு – சிறிதளவு
எப்படிச் செய்வது?
ஒரு பாத்திரத்தில் ஸ்டஃபிங் செய்யத் தேவையான பொருள் களை ஒன்றாகக் கலந்து மூடி வைக்கவும். பஜ்ஜி செய்யத் தேவையான பொருள்களை (மிளகாய், எண்ணெய் தவிர) வாய் அகன்ற பாத்திரத்தில் போட்டு நீர்விட்டு தோசை மாவு பதத்துக்குக் கரைத்துக்கொள்ளவும்.
மிளகாயை எடுத்துக்கொண்டு அதன் நடுவில் கீறி உள் விதைகளை எடுத்து விடவும். கலந்துவைத்துள்ள உருளைக்கிழங்கு மசாலா சிறிதளவு எடுத்து அதனுள் வைத்து மூடவும். இதே மாதிரி எல்லா பஜ்ஜி மிளகாய்களையும் தயார் செய்துகொள்ளவும். பஜ்ஜி மாவுக் கலவையில் இந்த மிளகாய்களை முக்கியெடுத்து சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும். தக்காளி சாஸுடன் பரிமாறவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல்… சாப்பிடுவதற்கு சரியான நேரம் எது?