பலரால் விரும்பி சுவைக்கப்படும் கபாப் உணவு வகைகளை ஹோட்டலில்தான் வாங்கி சாப்பிட வேண்டுமா என்ன? வீட்டிலுள்ளவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இந்த வெஜிடபுள் சீக் கபாப்பை வீட்டிலேயே செய்து அசத்தலாம்.
என்ன தேவை?
வேகவைத்து (தோல் உரித்து) மசித்த உருளைக்கிழங்கு – அரை கிலோ
வேகவைத்த பச்சைப் பட்டாணி – 50 கிராம்
பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர் – 1 கப்
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
சீரகத்தூள் – அரை டீஸ்பூன்
சாட் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் – ஒன்றரை டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
வெண்ணெய் – 100 கிராம்
எப்படிச் செய்வது?
அடுப்பில் வாணலியை வைத்து வெண்ணெய் ஊற்றி உருகியதும், பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர் சேர்த்து நன்கு வதக்கி ஆற வைக்கவும். இத்துடன் வேகவைத்த பச்சைப் பட்டாணியைச் சேர்த்து, மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். அரைத்தவற்றை ஒரு பவுலில் போட்டு அதனுடன், வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கைச் சேர்த்துக் கலந்து கொள்ளவும்.
இத்துடன் மிளகாய்த்தூள், சீரகத்தூள், சாட் மசாலாத்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு கலந்து மாவு பதத்துக்கு சற்று கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். கிரில் அடுப்புகளில் கொடுக்கப்படும் ஸ்கீவர்ஸில் (மரக்கைப்பிடியிலான நீளமான இரும்புக்கம்பி) வெண்ணெய் தடவி, கொலுக்கட்டை போல மாவை கம்பிகளில் பிடித்து வைக்கவும். இதனை பார்பிக்யு சார்க்கோல் கிரில் அடுப்பில் வைத்து 20 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும்.
அவ்வப்போது உணவுகள் மீது வெண்ணெய் தடவி விட்டால் சட்டென கருகாது. வெந்ததும் மெதுவாக கம்பியில் இருந்து உருவி, சாஸ் உடன் பரிமாறவும். பார்பிக்யு அடுப்பில் வைத்து நன்கு கிரில் செய்யவும். பார்பிக்யு அடுப்பு இல்லாதவர்கள் மாவை வடை போல தட்டி, அடுப்பில் தோசைக்கல் வைத்து அதில்போட்டு, இருபுறமும் லேசாகத் திருப்பி, அவ்வப்போது எண்ணெய் விட்டு வேக வைத்து எடுக்கவும்.