கைகளில் கிடைக்கிற காய்கறிகளை எல்லாம் வெட்டிப்போட்டு, கொஞ்சம் உப்பும், எலுமிச்சைப் பழச்சாறும் சேர்த்து கலந்து சாப்பிடும் சாலட் வகைகள் வீக் எண்ட் கொண்டாட்டமாக உள்ள நிலையில் அந்த காய்கறிகளை வைத்தே சுவையான இந்த வெஜ் நக்கட்ஸ் செய்து இந்த வீக் எண்டைக் கொண்டாடலாம். குடும்பத்தினரையும் மகிழ்விக்கலாம்.
என்ன தேவை?
நறுக்கிய பீன்ஸ், கேரட் – தலா ஒரு கப்
பச்சைப் பட்டாணி – அரை கப்
உருளைக்கிழங்கு (வேகவைத்தது) – 2
வெங்காயம் – ஒன்று (நறுக்கவும்)
பச்சை மிளகாய் – 2 (நறுக்கவும்)
மிளகாய்த்தூள் – ஒரு டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்
தனியாத்தூள் – அரை டீஸ்பூன்
சீரகத்தூள் – அரை டீஸ்பூன்
சாட் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன்
ஆம்சூர் பவுடர் (மாங்காய்த்தூள்) – அரை டீஸ்பூன்
இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
பிரெட் தூள் – அரை கப்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
கரைக்க…
மைதா மாவு – 2 டேபிள்ஸ்பூன்
கார்ன்ஃப்ளார் (சோள மாவு) – 2 டேபிள்ஸ்பூன்
மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
தண்ணீர் – சிறிதளவு
எப்படிச் செய்வது?
ஒரு கடாயில் எண்ணெய்விட்டு வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் காய்கறிகளைச் சேர்த்து வதக்கவும். பின்பு, அதில் அனைத்து மசாலா பொடிகளையும் சேர்க்கவும். கடைசியாக இஞ்சி – பூண்டு விழுது, உப்பு, கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கவும்.
கரைக்கக்கொடுத்துள்ள கார்ன்ஃப்ளார், மைதா, மிளகுத்தூள், உப்பு இவற்றுடன் தண்ணீர் சேர்த்துக் கலக்கவும். பின்பு, காய்கறிக் கலவையை சதுர வடிவில் செய்து மாவில் தோய்த்து பிரெட் தூளில் புரட்டி, எண்ணெயில் சுட்டெடுக்கவும்.