நம்மில் பலருக்கு வாழைப்பூ என்றால் முதலில் நினைவுக்கு வருவது வடையாகத்தான் இருக்கும். சிலர் உசிலி செய்வார்கள். வாழைப்பூவில் பொரியலும் செய்து அசத்த இந்த ரெசிப்பி உதவும். வாழைப்பூவில் உள்ள துவர்ப்புச்சத்து ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கும். அனைவருக்கும் ஏற்றது.
என்ன தேவை?
வாழைப்பூ – ஒன்று (சிறியது)
தேங்காய் துருவல் – 4 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை
புளித் தண்ணீர் – சிறிய கப்
கடுகு – கால் டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – கால் டீஸ்பூன்
காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், மோர் – சிறிதளவு, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
வாழைப்பூவை ஆய்ந்து நடுவில் நரம்பு போல் உள்ள காம்பை எடுத்துவிட்டுப் பொடியாக நறுக்கி, சிறிது மோர் கலந்த தண்ணீரில் ஊற வைக்கவும். பிறகு, புளித் தண்ணீர், உப்பு, மஞ்சள்தூள், சேர்த்து வேக வைத்து தண்ணீரை வடித்து நன்கு பிழியவும். கடாயில் எண்ணெய் விட்டு… கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்து, காய்ந்த மிளகாய் கிள்ளிப் போட்டு, கறிவேப்பிலை, பிழிந்து வைத்திருக்கும் வாழைப்பூ, தேங்காய் துருவல் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும்.