நார்ச்சத்து மிகுந்த வாழைத்தண்டு ஆரோக்கியத்தின் சுரங்கமாகக் கருதப்படுகிறது. எடையைக் குறைக்கவும், சிறுநீரகக் கற்களின் பாதிப்பிலிருந்து உடலைக் காக்கவும் வாழைத்தண்டு கைகொடுக்கும். பொரியலைத் தவிர வாழைத்தண்டில் வேறென்ன செய்ய முடியும் என்று கேட்பவர்கள், வாழைத்தண்டில் பொங்கலும் செய்ய இந்த ரெசிப்பி உதவும்.
என்ன தேவை?
வாழைத்தண்டு – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
பயத்தம்பருப்பு – 100 கிராம்
நெய் – 50 கிராம்
கறிவேப்பிலை – சிறிதளவு
மிளகு – 2 டீஸ்பூன்
சீரகம் – 2 டீஸ்பூன்
இஞ்சி – சிறிய துண்டு (பொடியாக நறுக்கவும்)
பச்சை மிளகாய் – 2 (நறுக்கவும்)
அரிசி – கால் கிலோ
முந்திரிப் பருப்பு – 25 கிராம்
தண்ணீர் – 4 கப்
உப்பு, மஞ்சள்தூள் – தேவைக்கேற்ப
எப்படிச் செய்வது?
ஒரு குக்கரில் சிறிது நெய் ஊற்றி, பொடியாக நறுக்கிய வாழைத்தண்டை வதக்கிக்கொள்ளவும். அதனுடன் அரிசி, பயத்தம்பருப்பு, உப்பு, மஞ்சள்தூள், தண்ணீர் ஆகியவற்றை சேர்க்கவும். பின்னர் குக்கரை மூடி மூன்று முதல் நான்கு விசில் வரும்வரை வேகவிட்டு இறக்கவும். பிறகு ஒரு கடாயில் இன்னும் கொஞ்சம் நெய் ஊற்றி கறிவேப்பிலை, மிளகு, சீரகம், இஞ்சி, பச்சை மிளகாய் போட்டுத் தாளித்து முந்திரி போட்டு வேகவைத்துள்ள சாதத்தில் சேர்த்துக் கிளறினால் வாழைத்தண்டுப் பொங்கல் தயார்.
வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!