கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இன்று(அக்டோபர் 12) உத்தரவிட்டுள்ளது.
கூட்டாளி செல்வத்தை கொலை செய்த வழக்கில் மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தை கடந்த ஜூன் மாதம் விருதுநகர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் தனக்கு ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அதில், “காவல் துறை உள்நோக்கத்துடன் செயல்பட்டு ஆள் காணவில்லை என்று புகார் அளிக்கப்படும் அனைத்து வழக்குகளிலும் என்னை கைது செய்கிறார்கள். கடந்த 5 வருடங்களாக என் மீது எவ்வித புதிய வழக்குகளும் பதியப்படவில்லை. தற்போது பதிவு செய்யப்பட்டுள்ள கொலை வழக்கில் எவ்வித சம்பந்தம் இல்லாத நிலையில் நான் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளேன். இதனால், எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி சிவஞானம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல் துறை தரப்பில், ”மனுதாரர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன, ஜாமீன் வழங்கினால் சாட்சியங்கள் கலைக்கப்பட்டு வழக்கு விசாரணையில் பாதிப்பு ஏற்படும்” என்று கூறி ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து வரிச்சியூர் செல்வத்திற்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி சிவஞானம் உத்தரவிட்டுள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!
காவரி நீரை திறக்க உத்தரவு: மீண்டும் மறுத்த கர்நாடக அரசு!
பள்ளி கல்வித்துறை செயலாளர் மாற்றம்!