இந்திய சுதந்திரப் போராட்டத்தில் எத்தனையோ பேர் தங்கள் உடல், பொருள், உயிர் என அனைத்தையும் ஒப்படைத்துப் போராடியுள்ளனர். ஆனாலும் இன்றைய 2கே கிட்ஸுகளுக்கு விரல் விட்டு எண்ணும் சிலரே சுதந்திரப் போராட்டத் தியாகிகளாகத் தெரியும். அவர்களுக்கு மட்டுமல்ல நமது அரசுகளும் சிலரை மட்டுமே தொடர்ந்து கௌரவித்து வருகின்றன.
இன்று (ஜூலை 23) தமிழ்நாட்டின் அன்றைய சேலம் மாவட்டம் இன்றைய நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த வரதராஜுலு நாயுடுவின் நினைவு தினம். இந்த வரதராஜுலு நாயுடு யார்?
ராசிபுரத்தில் பெருமாள் நாயுடு என்னும் பெரும் செல்வந்தருக்கு 1887 இல் மகனாக பிறந்த வரதராஜுலு சென்னையில் படிப்பை முடித்தார். ஆயுர்வேத மருத்துவத்தில் பயிற்சி பெற்றார். தனது இளமைக் காலத்தில் மகாகவி பாரதியாரை பற்றி கேள்விப்பட்டு சேலத்தில் இருந்து புதுச்சேரிக்கு சென்று பாரதியாரை சந்தித்தார். அரசியலிலும் தொழிற்சங்க நடவடிக்கைகளிலும் ஈடுபட்டார். தொடர்ந்து காங்கிரஸ் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, வெள்ளையர்களுக்கு எதிரான மனப்பான்மை கொண்டிருந்த வரதராஜுலு தனது 30 ஆவது வயதில் ஆயுர்வேத மருத்துவத்தை கைவிட்டு காங்கிரஸில் சேர்ந்தார். பிறகு படிப்படியாக காங்கிரஸின் சென்னை மாகாண தலைவரானார். பெரியாருக்கு நெருக்கமானார்.
அண்ணா மெட்ராஸ் ராஜதானிக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டுவதற்கு பற்பல ஆண்டுகள் முன்பே தமிழ்நாடு என்ற பத்திரிகையை தொடங்கி நடத்தி வந்தவர் வரதராஜுலு. அந்தக் கட்டுரையில் எழுதிய கட்டுரைக்காக ஆங்கிலேயரால் சிறையிலடைக்கப்பட்டார். மேலும் இந்தியா முழுதும் இன்று பல்கிப் பரவியிருக்கும் ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஆங்கில நாளேட்டை முதன் முதலில் தொடங்கி நடத்தியவரும் வரதராஜுலுவே. பொருளாதார நெருக்கடியால் இந்தியன் எக்ஸ்பிரஸ் பின் சதானந்த் என்பவரின் கைக்கு போய் பின் கோயங்கா வசமானது.
1920 இல் காந்தி தமிழகம் வந்தபோது திருப்பூரிலும், 1921 ஆம் ஆண்டு சேலத்திலும் வரதராஜுலு வீட்டில்தான் தங்கினார். அப்போது வரதராஜுலுவின் மனைவி ருக்மணி தான் அணிந்திருந்த நகைகள் அனைத்தையும் சுதந்திரப் போராட்டத்துக்காக காந்தியிடம் ஓப்படைத்தார். 1957 ஜூலை 23 ஆம் தேதி காலமானார் வரதராஜுலு.
இன்று வரதராஜுலுவின் நினைவு தினத்தை ராசிபுரத்தில் அவருக்கு வீரவணக்கம் செலுத்தி அனுசரித்துள்ள விடுதலைக் களம் அமைப்பின் தலைவர் கொ.நாகராஜன், “இந்திய சுதந்திரப் போராட்டத்துக்கு பெரும் பங்காற்றியவர் வரதராஜுலு நாயுடு. வரிகொடா இயக்கத்தை முன்னெடுத்தவர். தமிழ்நாடு மற்றும் இந்திய பத்திரிகை உலகத்தில் முக்கியமானவராகத் திகழ்ந்தவர். இப்படிப்பட்ட தியாகிக்கு இப்போது எந்த அடையாளமும் இல்லை. ராசிபுரத்தில் வரதராஜுலு நாயுடுவுக்கு மணிமண்டபம், சிலை அமைத்து அவரது வாழ்வின் செய்தியை இந்தத் தலைமுறைக்கு தமிழ்நாடு அரசு எடுத்துச் செல்ல வேண்டும்” என்று வேண்டுகோள் வைத்தார்.
–வேந்தன்