வரகு அரிசியில் மாவுச்சத்து குறைவாகவும் நார்ச்சத்து மிகுதியாகவும் உள்ளதால் கோடைக்காலத்தில் ஏற்படும் மலச்சிக்கல் பிரச்னையைத் தவிர்க்கும். மேலும். வரகு அரிசியில் உள்ள நார்ச்சத்து உடல் எடையைக் குறைக்க உதவும். வெந்தயக்கீரை வயிற்றில் ஏற்படும் அலர்ஜிகளைத் தடுத்து ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதால் வெயிலுக்கேற்ற உணவாக இந்த வரகு வெந்தயக்கீரை புலாவ் அமையும்.
என்ன தேவை?
வரகு அரிசி – ஒரு கப்
வெந்தயக்கீரை – ஒரு கப்
பெரிய வெங்காயம் – ஒன்று
தக்காளி – ஒன்று
புதினா, கொத்தமல்லித்தழை – சிறிதளவு
பட்டை – சிறிய துண்டு
கிராம்பு – 2
ஏலக்காய் – ஒன்று
பிரிஞ்சி இலை – சிறியது
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
பச்சைமிளகாய் – 2
சோம்பு – கால் டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
நெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
எண்ணெய் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தேங்காய்ப்பால் – ஒரு கப்
எப்படிச் செய்வது?
வரகரிசியைக் கழுவி, 10 நிமிடம் ஊற வைக்கவும். குக்கரில் நெய், எண்ணெய்ச் சேர்த்து சூடாக்கி, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை, சோம்பு, கீறிய பச்சைமிளகாய் சேர்த்துத் தாளிக்கவும்.
இத்துடன் சிறிது புதினா, கொத்தமல்லித்தழை, நீளமாக நறுக்கிய வெங்காயம் பொடியாக நறுக்கிய தக்காளி, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். இத்துடன் வெந்தயக்கீரை, மஞ்சள்தூள் ஊற, வைத்த வரகரிசி சேர்த்து வதக்கவும்.
பிறகு ஒரு கப் தேங்காய்ப்பால், ஒன்றரை கப் நீர், உப்பு சேர்த்துக் கிளறி, ஒரு கொதி வந்தவுடன் குக்கரை மூடி பிரஷர் வந்ததும் தீயை சிம்மில் வைத்து, 10 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும். பிரஷர் அடங்கியதும், திறந்து கிளறி, சூடாகப் பரிமாறவும். சிப்ஸ், தயிர்ப்பச்சடி சரியான காம்பினேஷன்.