கால்சியம் சத்து நிறைந்த முருங்கைக்கீரையுடன் நார்ச்சத்து அதிகமுள்ள வரகு அரசி சேர்த்து செய்யப்படும் இந்த அடை, பெரியவர்களுக்கு காலை டிபன் அல்லது இரவு சிற்றுண்டியுடன் கொடுக்கும்போது அவர்களுக்கு தேவையான பலம் கிடைத்துவிடும். எடை குறைப்பில் உள்ளவர்களுக்கும் உதவும்.
என்ன தேவை? Varagu Arisi Keerai Adai
வரகு அரிசி – 1 கப்
துவரம்பருப்பு – கால் கப்
கடலைப்பருப்பு -1 டேபிள்ஸ்பூன்
உளுந்து -2 டேபிள்ஸ்பூன்
பாசிப்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்
சன்னா ( கொண்டைக்கடலை) – கால் கப்
பொடியாக நறுக்கிய சின்னவெங்காயம் – அரை கப்
இலையாக ஆய்ந்த முருங்கைக் கீரை – அரை கப்
மிளகாய்த்தூள்- 2 டீஸ்பூன்
தேங்காய்த்துருவல் – கால் கப்
கொத்தமல்லித்தழை – 2 டேபிள்ஸ்பூன்
சோம்பு – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
எப்படிச் செய்வது? Varagu Arisi Keerai Adai
சன்னாவை தனியே 5 மணி நேரம் ஊற வைக்கவும். பாசிப்பருப்பு, வரகு, அரிசி, உளுந்து, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு இவற்றை ஒன்றாக 1 மணி நேரம் ஊறவைத்து அதனுடன் ஊறவைத்த சன்னாவையும் சேர்த்துக் கொரகொரப்பாக அரைக்கவும்.அரைத்த விழுதுடன் வெங்காயம், கீரை, தேங்காய்த்துருவல், கொத்துமல்லித்தழை மிளகாய்த்தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து, ஒன்றிரண்டாகப் பொடித்த சோம்பு சேர்த்து, இட்லி மாவு பதத்துக்கு கரைக்கவும். நன்கு காய்ந்த தோசைக்கல்லில் சிறுசிறு அடைகளாக ஊற்றி, இருபுறமும் வெந்ததும் எடுத்து, பச்சை சட்னி அல்லது சிவப்பு சட்னியைத் தடவி, உருட்டி வைத்துப் பரிமாறலாம்.
குறிப்பு: சோம்பு வாசம் பிடிக்காதவர்கள் பெருங்காயம் சேர்த்துக் கொள்ளலாம்.