கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கைத்துப்பாக்கி வழங்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு விஏஓ சங்கம் கடிதம் எழுதியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள சூசை பாண்டியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் லூர்து பிரான்சிஸ். முறப்பநாடு கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்தார்.
இவரை மணல் கடத்தல் விவகாரத்தில் தொடர்புடையவர்கள் கடந்த மாதம் அலுவலகத்தில் வைத்தே வெட்டி படுகொலை செய்தனர். தமிழகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் தாக்கப்படுவது இது முதன்முறை அல்ல.
இந்த சூழலில் தங்களுக்கு பாதுகாப்பு வழங்க கேட்டு விஏஓ சங்கத்தினர் முதல்வர் ஸ்டாலினுக்கு இன்று (மே 2) கடிதம் எழுதியுள்ளனர்.
அதில் , ”லூர்து பிரான்சிஸ் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் நிதி உதவி வழங்கியதற்கும் அரசு வேலை வழங்கியதற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
தூத்துக்குடி நிகழ்வு போன்று சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகாவில் உள்ள விஏஓ வினோத் குமாரை மணல் கடத்தல் கும்பல் வெட்டி கொலை செய்யும் நோக்கத்தில் விரட்டிய சம்பவம் நடைபெற்றுள்ளது.
இதுபோன்ற சம்பவங்களால் கிராம நிர்வாக அலுவலர்கள் அச்சத்தோடும் பாதுகாப்பாற்ற நிலையிலும் இருக்கின்றனர். எனினும் நாங்கள் நேர்மையாக வேலை செய்து வருகிறோம்.
எங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் ஒரு தற்காப்பு பயிற்சியை உடனடியாக வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். தேவைப்படும் பட்சத்தில் கைத்துப்பாக்கி வழங்கவும் அரசு உடனடியாக பரிசீலனை செய்ய வேண்டும்.
புகார் அளித்தால் காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுபோன்று பணி கிராமங்களில் தங்குதல் வேண்டும் என்ற விதியை தளர்வு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளனர்.
பிரியா
என்.எல்.சி விவகாரம்: அமைச்சர்களை கடுமையாக சாடிய அன்புமணி
அரசுப் பேருந்து நடத்துனர் செய்த நல்ல விஷயம்!