விஏஒ-விற்கு நேர்ந்த துயரம்: ரூ.1 கோடி நிவாரணம் அறிவிப்பு!

தமிழகம்

தூத்துக்குடியில் பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு கோடி ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலராக லூர்து பிரான்ஸிஸ் பணியாற்றி வந்தார்.

இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு தாமிரபரணி ஆற்றுப் பகுதியில் ரோந்து சென்றிருந்தபோது, ராமசுப்பு என்பவர் ஆற்று மணலை கடத்தி சென்றதை பார்த்து உடனடியாக முறப்பநாடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த நிலையில், இன்று(ஏப்ரல்25) லூர்து பிரான்சிஸ் தனது அலுவலகத்தில் வழக்கமான பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, திடீரென அலுவலகத்திற்குள் புகுந்த இருவர், அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.

இதில் படுகாயம் அடைந்த அவர், நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இச்சூழலில், வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு கோடி ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று (ஏப்ரல் 25) வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,”தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டம், முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலராகப் பணிபுரியும் லூர்து பிரான்சிஸ் ( 53) என்பவரை இன்று மதியம் அவர் அலுவலகத்தில் பணியில் இருந்த போது இரண்டு நபர்கள் அரிவாளால் வெட்டியுள்ளனர்.

தலை மற்றும் கைகளில் பலத்த காயமுற்ற லூர்து பிரான்சிஸ் அவசர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார்.

இவரைத் தாக்கிய இரு நபர்களில் ராமசுப்பு என்பவர் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். முதற்கட்ட விசாரணையின்படி, ராமசுப்புவின் மீது லூர்து பிரான்சிஸ், கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில், கடந்த வாரம் மணல் கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டதால், ஆத்திரம் அடைந்த ராமசுப்பு மற்றொரு நபரை அழைத்துக் கொண்டு அவரை வெட்டியதாகத் தெரிய வருகிறது. இதுகுறித்து, காவல் துறையின் மூலம் உரிய மேல் விசாரணை நடைபெற்று வருகிறது” என்று கூறியுள்ளார்.

மேலும், பிரான்சிஸ், கிராம நிர்வாக அலுவலர் பணியிலிருக்கும் போது வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் நமக்கெல்லாம் மிகுந்த துயரத்தினை அளித்துள்ளது. தம் கடமையை முறையாக நிறைவேற்றி, அதன் காரணமாக உயிரிழந்த கிராம நிர்வாக அலுவலரின் பொறுப்புணர்வையும், கடமை உணர்ச்சியையும் தமிழக அரசு போற்றுகின்றது.

இக்கொடிய சம்பவத்தில் உயிரிழந்த லூர்து பிரான்சிஸ் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், லூர்து பிரான்சிஸின் குடும்பத்தினருக்கு அரசு சார்பாக உடனடியாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாய் நிதியுதவியும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

மும்பையை வீழ்த்துமா குஜராத்?

பொன்னியின் செல்வன் 2 வெளியீடு : புலம்பும் தியேட்டர் உரிமையாளர்கள்!

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *