கர்நாடக எழுத்தாளர் தேவநூர மஹாதேவாவிற்கு நாளை (டிசம்பர் 12) ‘வைக்கம் விருது’ வழங்கப்பட இருக்கிறது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் சட்டமன்றப் பேரவையில் கடந்த ஆண்டு மார்ச் 30ஆம் தேதி முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.
அவர், “எல்லை கடந்து சென்று சமூக நீதிக்காக வைக்கத்தில் போராடிய தந்தை பெரியார் அவர்களை நினைவுகூறும் வகையில், பிற மாநிலங்களில் ஒடுக்கப்பட்டவர்கள் நலனுக்காகப் பாடுபட்டு, குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்திய ஆளுமைகள் அல்லது நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் “வைக்கம் விருது” சமூகநீதி நாளான செப்டம்பர் 17-ஆம் நாளன்று தமிழ்நாடு அரசால் வழங்கப்படும்” என்று அறிவித்திருந்தார்.
அந்த அறிவிப்பின் படி 2024-ஆம் ஆண்டிற்கான “வைக்கம் விருது” கர்நாடக மாநிலம், மைசூரை சேர்ந்த புகழ் பெற்ற எழுத்தாளர் தேவநூர மஹாதேவாவிற்கு வழங்க தமிழக அரசு முடிவு செய்தது.
வைக்கம் விருதிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தேவநூர மஹாதேவாவிற்கு ஐந்து இலட்சம் ரூபாய்க்கான காசோலை, பாராட்டுச் சான்றிதழ் மற்றும் தங்க முலாம் பூசிய பதக்கம் முதல்வர் ஸ்டாலின் கேரள மாநிலம் வைக்கத்தில் நாளை (டிசம்பர் 12) நடைபெற உள்ள பெரியார் நினைவகம் திறப்புவிழா நிகழ்ச்சியில் வழங்கவுள்ளார்.
தேவநூர மஹாதேவா சிறந்த எழுத்தாளர் மற்றும் சமூக ஆர்வலர் ஆவார். மக்களின் மொழியியல் உரிமைகளின் மீதான நிலைப்பாட்டில் அதிக ஈடுபாடு கொண்டவர்.
மேலும், சாதி அடிப்படையிலான பாகுபாடு மற்றும் அடக்குமுறைகளுக்கு எதிராகச் செயல்பட்டவர். இவர் ஒன்றிய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ மற்றும் சாகித்ய அகாதமி விருது போன்ற பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
“வடிவேலு குறித்து இனி தவறான கருத்து தெரிவிக்க மாட்டேன்”: நடிகர் சிங்கமுத்து
அதிமுக நிர்வாகி மீது வழக்குப்பதிவு!
பெரியார் நினைவகம் திறப்பு : கேரளா சென்ற ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு!