தமிழகத்தில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் வைகாசி விசாகத்தை முன்னிட்டு இன்று (மே 22) சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது.
வைகாசி விசாகம்:
தமிழ் கடவுள் என்று அழைக்கப்படுபவர் “முருகப்பெருமான் ”. அவர் அவதரித்த தினம் தான் “வைகாசி விசாகம்” திருநாள். விசாகம் என்பது ஆறு நட்சத்திரங்களை உள்ளடக்கியது.
விசாகம்: வி என்றால் பறவை என்றும், சாகம் என்றால் பயணம் என்றும் பொருள். அதன் காரணமாக முருகன் “விசாகன்” என்றும் அழைக்கப்படுகிறார்.
சிவபெருமானின் நெற்றிக்கண் வழியாக, 6 தீப்பொறிகளில் இருந்து உதித்தவர் முருகக்கடவுள். கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரம் போல், தை மாதம் பூசம் நட்சத்திரம் போல், பங்குனி மாத உத்திரம் நட்சத்திரம் போல், வைகாசி மாதம் வரும் விசாகம் நட்சத்திரம் முருகனுக்கு மிகவும் உகந்த நாளாக கருதப்படுகிறது.
இந்த நாளில், அனைத்து முருகன் கோவில்களிலும், சிறப்பு வழிபாடு, தேரோட்டம், திருவிழாக்கள் நடைபெறுகிறது.
திருப்பரங்குன்றம்:
ஆறுபடை வீடுகளில் முதலாம் படை வீடாக இருப்பது திருப்பரங்குன்றம். இங்கு இருக்கும் முருகன் “சுப்பிரமணிய சுவாமி” என்று அழைக்கப்படுகிறார்.
திருப்பரங்குன்றத்தில் வைகாசி விசாகத் திருநாள் 10 நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த திருவிழா மே 13ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது.
கடந்த 9 நாட்களாக கோவில் சந்ததியில், உற்சவர் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு அவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.
இந்நிலையில், வைகாசி விசாக திருநாளான இன்று தமிழகம் மட்டுமின்றி பல மாநிலங்களில் இருந்து முருக பக்தர்கள் திருப்பரங்குன்றத்திற்கு வருகை தருகின்றனர்.
பலர் பாதயாத்திரையாக அலகு குத்தியும், காவடி எடுத்தும் தங்களது நேர்த்திகடன்களை செலுத்தி வருகின்றனர். பக்தர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.
திருச்செந்தூர்
உலக புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் முருகனின் இரண்டாம் படை வீடாகும். இங்கு வைகாசி விசாகம் வெகு விமர்சையாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில், வைகாசி விசாக நாளான இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் கடலில் புனித நீராடி, முருகனை வழிபட்டு வருகின்றனர். விசாகத்தை முன்னிட்டு கோவில் நடை இன்று அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது.
தொடர்ந்து, காலை 10.30 மணிக்கு மூலவர் சுப்பிரமணியருக்கு உச்சிக்கால அபிஷேகமும், சண்முகருக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது. இன்று மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெற உள்ளது.
இதையடுத்து, சுவாமி ஜெயந்தி நாதர் மண்டபத்தில் எழுந்தருள உள்ளார். அங்கு முனி குமாரர்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். பின்னர் இரவு 7.15 மணிக்கு ராக்கால அபிஷேகம் நடைபெறும்.
வைகாசி விசாகத்தை முன்னிட்டு திருச்செந்தூரில் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருப்பதால், காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
பழனி
ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடாக உள்ளது “பழனி முத்துக்குமார சுவாமி திருக்கோவில்”. பழனியில் வருடந்தோறும் நடைபெறும் முக்கிய விழாக்களில் வசந்தோற்சவம் எனப்படும் வைகாசி விசாகப் பெருவிழாவும் ஒன்று.
இந்த திருவிழா மே 13ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் விழாவின் முக்கிய நிகழ்வான “திருக்கல்யாண நிகழ்ச்சி” நேற்று நடைபெற்றது. தொடர்ந்து, இன்று பழனி ஆண்டவர் முத்துக்குமாரசுவாமிக்கு திருத்தேரோட்டம் நடைபெறுகிறது.
இந்த தேரோட்டத்தை காண பல இடங்களில் இருந்து பக்தர்கள் பழனியை நோக்கி படையெடுத்துள்ளனர். வைகாசி விசாக நாளான இன்று அளவிற்கு அதிகமாக பக்தர்கள் கூட்டம் பழனியில் உள்ளது. இதனால் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சுவாமிமலை
நான்காம் படைவீடான சுவாமிமலையில், மூலவராக உள்ள சுவாமிநாதருக்கு இன்று சிறப்பு அலங்கார, ஆராதனைகள், வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.
பல ஊர்களில் இருந்து வரும் பக்தர்கள் இன்று தங்களது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றி செல்வார்கள்.
திருத்தணி
இன்றைய தினம் விரதம் இருந்து முருகனிடம் வழிபட்டால் வேண்டிய பலன்கள் கிடைக்கும் என்பதால்,பக்தர்கள் திருத்தணி முருகன் கோயிலில் கூடி விரதமிருந்து வழிபட்டு வருகின்றனர். முருகனுக்கான சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் அனைத்தும் காலை முதல் நடைபெற்று வருகிறது.
பழமுதிர்சோலை
தமிழகத்தில் உள்ள சிறப்பு பெற்ற முருகன் கோவில்களில் ஒன்று பழமுதிர்சோலை முருகன் கோவில்.
இங்கு, காலை முதல் மூலவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது. பால், சந்தனம், தயிர், நெய், ஜவ்வாது போன்ற நறுமண மற்றும் வாசனை திரவியங்கள் மூலம் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது.
வடபழனி
சென்னையில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில்களில் ஒன்று வடபழனி முருகன் கோவில்.
வைகாசி விசாகத்தை முன்னிட்டு, நேற்று முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மங்கள கிரி விமானத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் வீதி உலா நடைபெற்றது.
தொடர்ந்து இன்று காலை 9 மணிக்கு வள்ளி தெய்வானை சமேத சண்முகர் வீதி உலாவும், காலை 10 மணிக்கு தீர்த்த வாரி உற்சவமும், கலசாபிஷேகமும் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, திருக்கல்யாண உற்சவம், மயில்வாகனத்தில் புறப்பாடு நடைபெறும். இந்த உற்சவங்களை காண பல இடங்களில் இருந்து பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
முருகன் கோவில்களில் மிகவும் பிரசித்திப்பெற்ற கோவில்களான கழுகுமலை முருகன் கோவில், கந்தக்கோட்டம் முருகன் கோவில், குமாரகோவில் வேளிமாலி முருகன், குன்றத்தூர் முருகன் கோவில், மருதமலை முருகன் கோவில், எட்டுக்குடி முருகன் கோவில் போன்ற அனைத்து கோவில்களிலும் வைகாசி விசாக நாளான இன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நாக சைதன்யாவின் புது கார்.. விலை என்ன தெரியுமா?
ரூ.1,300 உயர்ந்த வெள்ளி விலை… தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?