கடலூர் மாவட்டம் வடலுாரில் அருட்பிரகாச வள்ளலார் ஏற்படுத்திய சத்திய ஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசனம் இன்று (பிப்ரவரி 5) நடைபெற்றது.
”வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடி நின்றேன்” என்று பாடி ஜீவகாருண்யத்தை உலகுக்கு எடுத்துரைத்த வள்ளலார் கடலூர் மாவட்டம் வடலூரில் சத்தியஞான சபையை நிறுவினார்.
இங்கு ஆண்டுதோறும் தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். வடலூரில் நடைபெறும் ஜோதி தரிசன விழாவைக் காணப் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.
152வது ஜோதி தரிசன விழா நேற்று (பிப்ரவரி 4) கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து இன்று காலை 6 மணிக்கு 7 திரைகள் நீக்கப்பட்டு ஜோதி தரிசனம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அருட்பெருஞ்ஜோதி மந்திரத்தை முழங்கி தரிசனம் செய்தார்கள்.
தொடர்ந்து காலை 10 மணி, பகல் 1 மணி, இரவு 7 மணி, நாளை காலை 6 மணி என 6 காலங்களில் 7 திரைகள் நீக்கப்பட்டு ஜோதி தரிசனம் நடைபெறவிருக்கிறது.
இதேபோல், வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாக திருமாளிகையில் வரும் 7ம் தேதி திருஅறை தரிசனம் நடைபெறவுள்ளது.
ஜோதி தரிசனத்திற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் வடலூரில் கூடுவார்கள் என்பதால் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க பல்வேறு இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டுக் கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
ஜோதி தரிசனத்திற்காகக் கடலூர், விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி, சிதம்பரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர், சேலம்,
திருவண்ணாமலை, கும்பகோணம், வேலூர், சென்னை, புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இருந்து அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
மோனிஷா