வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் தண்டனையை உறுதிசெய்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள வாச்சாத்தி மலைகிராமத்தில் சந்தன மரங்கள் பதுக்கி வைத்திருப்பதாக 1992-ஆம் ஆண்டு ஜூன் 20-ஆம் தேதி வனத்துறையினர், காவல்துறையினர், வருவாய் துறையினர் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின் போது கிராமத்தில் இருந்த இளம்பெண்கள் 18 பேரை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், ஆண்களை கடுமையாக தாக்கி பொருட்களை சேதப்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தியது. சிபிஐ விசாரணையில் 4 ஐ.எப்.எஸ் அதிகாரிகள், 124 வனத்துறை அதிகாரிகள், 5 வருவாய்த்துறை என 215 பேர் மீது பாலியல் வன்புணர்வு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
2011-ஆம் ஆண்டு செப்டம்பர் 29-ஆம் தேதி இந்த வழக்கை விசாரித்து வந்த தர்மபுரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்ட 215 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கியது.
பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட 4 ஐஎப்எஸ் அதிகாரிகள் உள்பட 17 வனத்துறை அதிகாரிகளுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும்,
5 பேருக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையும் மற்றவர்களுக்கு ஓராண்டு முதல் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின் போது குற்றம்சாட்டப்பட்டவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் இறந்துவிட்டனர். இந்த தீர்ப்பை எதிர்த்து தண்டனை பெற்றவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர்.
இந்த வழக்கை நீதிபதி பி.வேல்முருகன் விசாரித்து வந்தார். மார்ச் 4-ஆம் தேதி வாச்சாத்தி மலை கிராமத்திற்கு நேரில் சென்று அங்குள்ள மக்களிடம் விசாரணை நடத்தினார். வாச்சாத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி, “2011-ஆம் ஆண்டு தர்மபுரி மாவட்ட நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு வழங்கிய தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்கிறது.
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.10 லட்சம் தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும்.
அதில் ரூ.5 லட்சத்தை குற்றவாளிகளிடம் வசூலிக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.
அப்போதைய எஸ்.பி., ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தீர்ப்பு வழங்கி மேல்முறையீட்டு வழக்கை நீதிபதி வேல்முருகன் தள்ளுபடி செய்துள்ளார்.
செல்வம்