மறைந்த பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் பிரேதப் பரிசோதனை அறிக்கை இன்று (பிப்ரவரி 5) வெளியாகியுள்ளது.
தமிழ் உட்பட19 மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியவர் பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம். நேற்று (பிப்ரவரி 4) இவரது வீட்டில் தலையில் காயங்களுடன் உயிரிழந்தார்.
வாணி ஜெயராமின் இந்த மரணம் சந்தேகத்தை ஏற்படுத்திய நிலையில் போலீஸ் இயற்கைக்கு மாறான மரணம் என்று வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். பின்னர் வாணி ஜெயராம் உடலுக்கு சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் மருத்துவ நிபுணர்கள் மூலம் பிரேத பரிசோதனை நடைபெற்றது.
பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் வாணி ஜெயராமின் உடல் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு திரைத்துறையினர், நண்பர்கள், உறவினர்கள் எனப் பலரும் அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து அவரது உடல் சென்னை பெசண்ட் நகரில் தகனம் செய்யப்படுவதற்காக ஊர்வலமாகக் கொண்டு செல்லப்படுகிறது.
இந்நிலையில் வாணி ஜெயராமின் பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. அதில், வாணி ஜெயராம் கீழே விழுந்ததில் அவரது தலையில் ஏற்பட்ட காயம் தான் மரணத்திற்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாணி ஜெயராம் வீட்டின் படுக்கையறையில் வைக்கப்பட்டிருந்த 2 அடி உயரமுள்ள பழமையான மேஜை மீது விழுந்ததில் தான் வாணி ஜெயராமுக்கு தலையில் பலமாக அடிப்பட்டுள்ளது.
வாணி ஜெயராம் நெற்றியில் உள்ள காயம் மற்றும் மேஜை விளிம்பில் உள்ள ரத்தக் கறையை வைத்துத் தான் மேற்கண்ட குறிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தடயவியல் நிபுணர் சோதனையிலும் இது உறுதியாகி உள்ளதாகவும் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மோனிஷா
துர்கா ஸ்டாலின் சகோதரி மரணம்: இன்று மாலை இறுதிச்சடங்கு
வாணி ஜெயராம் உடலுக்கு காவல்துறை மரியாதை!